இந்தியாவின் நம்பகமான மோட்டார்ஸ்போர்ட் அணியுடன் இணைந்தது ரிலையன்ஸ் கூல்டிரிங்ஸ்; ஆசிய லீ மான்ஸ் ரேஸுக்குத் தயாராகும் 'அஜித் ரெடான்ட் ரேஸிங்' அணி!
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், ஆர்வமுள்ள கார் ரேஸருமான அஜித் குமார் (Ajith Kumar) அவர்களின் கார் ரேஸிங் அணிக்கு, இந்தியாவின் பெரும் வணிக நிறுவனமான ரிலையன்ஸின் (Reliance) முதன்மை எனர்ஜி கூல்டிரிங்ஸ் பிராண்டான 'கேம்பா எனர்ஜி' (Campa Energy) நிறுவனம் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக (Official Sponsor) இணைந்துள்ளது. இது நடிகர் அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் குமார், தனது உச்ச நட்சத்திரப் பணிகளுக்கு இடையே, தனது கனவுப் பயணமான கார் ரேஸிங்கிலும் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார். அவர் கடந்த 2024 டிசம்பரில் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன், நேரடியாக கார் ரேஸ் பயிற்சி மற்றும் போட்டிகளில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை அஜித் குமார், துபாய், இத்தாலி, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற நான்கு 24H கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். அதில் 3 போட்டிகளில் 3வது இடத்தையும் , ஒரு போட்டியில் 2வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் சமீபத்தில் "அஜித் ரெடான்ட் ரேஸிங்" என்ற பெயரில் தனது புதிய அணியை அறிமுகப்படுத்தினார். இதுவரை எந்தப் பெரிய ஸ்பான்சரையும் இணைக்காமல் இருந்த அஜித்தின் அணி, தற்போது ரிலையன்ஸ் கேம்பா எனர்ஜி நிறுவனத்துடன் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார்ஸ்போர்ட் அணிகளில் ஒன்றான அஜித் குமார் ரேசிங்குடன் தனது கூட்டாண்மையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. கேம்பா எனர்ஜி, அணியின் அதிகாரப்பூர்வ பார்ட்னராகச் செயல்படும்" என்று உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது, அஜித் குமாரின் அணியானது விரைவில் நடைபெற உள்ள ஆசிய லீ மான்ஸ் ரேஸுக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தப் பயிற்சி ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா சர்க்யூட்டில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய ஸ்பான்சர்ஷிப் மூலம் அஜித் குமாரின் அணி மேலும் பல சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு, இந்தியக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
