ஜெராக்ஸ் கடையில் தவறவிட்ட ₹4.50 லட்சம் மதிப்புள்ள தாலிச் சங்கிலி : உரிமையாளர் நேர்மையால் மீட்பு! Xerox Shop Owner's Honesty: ₹4.50 Lakh Gold Chain Returned to Owner in Chennai
பிரசவத்திற்காகச் சென்ற பெண் தவறவிட்ட நகைகள்; விரைவான காவல் துறை நடவடிக்கையால் உரியவரிடம் ஒப்படைப்பு!
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் சுமார் ஐந்து சவரன் (₹4.50 லட்சம்) மதிப்புள்ள தங்க தாலிச் சங்கிலியை ஒரு பெண் தவறவிட்ட நிலையில், கடை உரிமையாளரின் உண்மையும் நேர்மையும் காரணமாக, அந்த நகைகள் உரியவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்ட சந்தோஷமான சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்ஹவுஸ், வி.ஆர். பிள்ளை தெருவில் 'கலைமகள்' என்ற பெயரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் வேல்முருகன். கடந்த 24.10.2025 அன்று இக்கடைக்கு வந்த ஒரு நபர், சுமார் 5 சவரன் எடையுள்ள ஒரு தாலிச் சங்கிலியை தற்செயலாகத் தவறவிட்டுச் சென்றுள்ளார். அந்தத் தங்க நகையைக் கண்டெடுத்த கடை உரிமையாளர் வேல்முருகன், நாணயத்துடன் உடனடியாக ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் அப்படியே ஒப்படைத்தார்.
புகாரின் பேரில் துரித நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல்களைப் பரிமாறி, புகார்கள் ஏதேனும் உள்ளதா என்று உடனடியாக விசாரித்து வந்தனர்.
விசாரணையில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கலைவாணன் என்பவரின் மனைவி ரஞ்சனி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தனது தாலிச் சங்கிலியைக் கழற்றி கணவர் வேல்முருகனிடம் கொடுத்துள்ளதும், அவர் ஜெராக்ஸ் எடுக்கச் சென்றபோது கடையில் தவறவிட்டுச் சென்றதும் உறுதியானது.
இதற்கிடையில், கலைவாணன் இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காணாமல் போனதாகப் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, நேற்று ராயப்பேட்டை உதவி ஆணையர் இளங்கோவன் முன்னிலையில், 5 சவரன் தாலிச் சங்கிலியைத் தவறவிட்ட ரஞ்சனியிடம், ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வேல்முருகனின் மனைவி அந்த தங்க நகையை பத்திரமாக ஒப்படைத்தார்.
நாணயத்தோடு தாலிச் சங்கிலியை ஒப்படைத்த கடை உரிமையாளர் வேல்முருகனுக்கும், முறையான விசாரணை மேற்கொண்டு விரைவாக நகைகளை உரிமையாளரிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கும் தாலிச் சங்கிலியைப் பெற்றுக்கொண்ட ரஞ்சனி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
