நெடுஞ்சாலையில் நின்ற டிரெய்லர் லாரி மீது பயணியர் பேருந்து மோதியதில் துயரம்; முதல்வர் இரங்கல் – வீரர்கள் போல் போலீசார் மீட்பு!
ராஜஸ்தான் மாநிலம் பளோடி மாவட்டத்தில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த ஒரு கோரமான பேருந்து விபத்தில், புனித யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் தொடர்ச்சியாக நிகழும் இந்த சாலை விபத்துகள், போக்குவரத்துத் துறையின் நிர்வாகத் திறனை கடுமையாகக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாளோடி மாவட்டத்தில், அதிகாலையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. காவல்துறை முதற்கட்ட விசாரணை அறிக்கையின்படி, பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் லாரி மீது பயங்கரமாக மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த அனைவரும், பிகானேர் மாவட்டத்தின் புகழ்பெற்ற புனிதத் தலமான கொலாயத்துக்கு சென்றுவிட்டு, ஜோத்பூர் மாவட்டத்தின் சூர்சாகர் பகுதியிலிருந்து சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் ஆவர்.சம்பவ இடத்திலேயே 18 உயிர்கள் பறிபோக, படுகாயமடைந்த மூன்று பேர் வீரர்கள் போல் செயல்பட்ட மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளதால், அதிகாரப்பூர்வ பலி எண்ணிக்கை உயரும் என்ற பயம் நிலவுகிறது.
இந்தத் துயரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் குறித்து ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தத் துயரமான நேரத்தில் அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தோள் கொடுத்து நிற்கிறது. அவர்களுக்கு அரசு சார்பில் அனைத்து தேவையான உதவிகளும் வழங்கப்படும்" என்று உறுதிமொழி அளித்துள்ளார்.ராஜஸ்தானில் இத்தகைய மரண ஓலம் புதிதல்ல. கடந்த மாதம் ஜெய்சல்மேர் பகுதியில் ஒரு ஸ்லீப்பர் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 26 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்து ஏர் கண்டிஷனரில் மின் கசிவு காரணமாக நிகழ்ந்தது. அந்தப் பேருந்தில் முன் பக்கம் மட்டுமே வெளியேறும் வழி (Exit) இருந்ததால், பலர் உள்ளேயே சிக்கி உயிரிழந்தனர்.
இது போன்ற கோர விபத்துகள் ஒருபுறம் தொடர, அதே மாத இறுதியில் உத்தரப்பிரதேசத்திலும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் ஸ்லீப்பர் பேருந்து, மின்கம்பத்துடன் மோதியதில் இருவர் உயிரிழந்ததோடு, 10 பேர் காயமடைந்தனர்.
தொடர்ச்சியான இந்த விபத்துகள், மாநிலங்களில் சாலைப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை கடுமையாக எழுப்பியுள்ளது. வாகனப் பராமரிப்பு, அனுமதி விதிமுறைகள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு அம்சங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் உருவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை விதிமீறல்கள் மற்றும் சட்டவிரோத வாகன மாற்றங்கள் குறித்து மாநிலம் முழுவதும் தற்போது தீவிர சோதனை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
