197 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிப்பு: போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை!
பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னை பெருநகர காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 1,023 கிலோகிராம் எடை கொண்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் மனோவியல் பொருட்கள் இன்று (நவ. 1) அறிவியல் பூர்வமாக எரித்து அழிக்கப்பட்டன.
செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே. மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட வசதி மையத்தில் இந்த அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 197 போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மொத்தமாக 1,023 கிலோகிராம் எடை கொண்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
போதைப்பொருள் ஒழிப்புக் குழுவின் (Drug Disposal Committee - DDC) உறுப்பினரும், சென்னை காவல்துறை தலைமையிடம் கூடுதல் ஆணையருமான விஜயேந்திர பிதாரி தலைமையிலான குழுவினரால் இந்த அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்களைப் பாதுகாப்பதற்கும், பொதுச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் அவற்றின் வலையமைப்புகளுக்கு எதிராகத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது. அனைத்துச் சுற்றுச்சூழல் மற்றும் சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு இந்த அழிப்பு செயல்முறை நடந்தது என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
