சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து துருவிய அதிகாரிகள்; நடிகர் ஸ்ரீகாந்த்திடம் வங்கி ஆவணங்களைப் பெற்று அமலாக்கத்துறை ஆய்வு!
சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய போதைப் பொருள் வழக்கில், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்காக நடிகர் ஸ்ரீகாந்த் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
கடந்த ஜூன் மாதம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உட்படப் பல நடிகர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்களிடமிருந்து 11.5 கிராம் கொக்கைன், 10 கிராம் மெத், ஓஜி கஞ்சா மற்றும் ₹40,000 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை விசாரித்த சில காவல்துறையினர் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுப் பட்டியல் நீண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறி, அமலாக்கத்துறையினர் வழக்கை விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாகச் சிறையில் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. நடிகர் கிருஷ்ணா ஏற்கனவே ஆஜராகி சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால், முதல் சம்மனுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜராகவில்லை.
இந்நிலையில், அமலாக்கத்துறையினர் இரண்டாவது முறையாகச் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்த் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவர், அடையாளம் தெரியாத வண்ணம் தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்தபடி கையில் பையுடன் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்தார்.
கடந்த ஒரு வருடமாக அவர் மேற்கொண்ட வங்கிப் பணப் பரிவர்த்தனைகள், வருமான வரித் தாக்கல் ஆவணங்கள், யூ.பி.ஐ. பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அவர் விசாரணைக்காகக் கொண்டு சென்றார். அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது அந்த ஆவணங்களை நுணுக்கமாக ஆய்வு செய்து அடுத்தக்கட்ட முடிவுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
