Civil Suit Filed Against Kaantha Movie: 'காந்தா' படத்திற்குத் தடை கோரி வழக்கு: துல்கர் சல்மான், தயாரிப்பு நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவு! Dulquer Salmaan and Producers Directed to Reply on Allegations of Wrongly Portraying M.K.T. Bhagavathar

'முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றைத் தவறாகச் சித்தரித்ததாகக் குற்றச்சாட்டு..படத் தயாரிப்பு நிறுவனங்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

தமிழ் திரையுலகின் 'முதல் சூப்பர் ஸ்டார்' என்று போற்றப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதரின் (எம்.கே.டி.) வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 'காந்தா' திரைப்படத்தின் வெளியீட்டுக்குத் தடை கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், முன்னணி நடிகர் துல்கர் சல்மானுக்கும் பதிலளிக்கும்படி சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் இணைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற, பாகவதரின் மகள் வழிப் பேரனான 64 வயதான தியாகராஜன் என்பவர் இந்த சிவில் வழக்கை  தாக்கல் செய்துள்ளார். நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், கொச்சியைச் சேர்ந்த 'வேஃபேரர் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்' மற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த 'ஸ்பிரிட் மீடியா பிரைவேட் லிமிடெட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை 'காந்தா' என்ற பெயரில் தயாரித்துள்ளன. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்டு, வருகிற நவம்பர் 14ஆம் தேதி படத்தை வெளியிடத் தயாராகி வந்த நிலையில் , இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பிரபலங்களின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுப்பதாக இருந்தால், அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம்  கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்று மனுதாரர் தியாகராஜன் தனது வாதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் தனது தாத்தாவின் கதாபாத்திரம் முற்றிலும் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக  அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாகவதர் ஒழுக்கமின்றி வாழ்ந்ததாகவும், கண்பார்வை இழந்ததாகவும், கடைசி காலத்தில் வறுமையில் சிக்கி, கடனாளியாக இறந்ததாகவும் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில், தனது தாத்தா சொந்தமாகப் பங்களாக்கள் வைத்திருந்தார் என்றும், 'பிளைமுத்' மற்றும் 'செவ்ரலெட்' போன்ற விலையுயர்ந்த கார்களை வைத்திருந்தார் என்றும், அவருக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் கிடையாது என்றும் மனுதாரர் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல், அவதூறான முறையில் சித்தரித்துத் தயாரிக்கப்பட்டுள்ள 'காந்தா' படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை நகர ஏழாவது உதவி உரிமையியல் நீதிமன்றம், மனுவுக்குப் பதிலளிக்கும்படி தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை  நவம்பர் 18ஆம் தேதிக்குத் தள்ளிவைப்பதாகவும் நீதிபதி அறிவித்தார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk