பணத்தை வசூலித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பிரதான குற்றவாளி.. தாய் உட்படக் கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு!
''திருகைலாசம் ஆன்மீக சுற்றுலா'' என்ற புனிதமான பெயரில் அப்பாவிச் சிவபக்தர்களிடமும், குடும்பத் தம்பதியர்களிடமும் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மாபெரும் மோசடியில் ஈடுபட்ட பிரதானக் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து, புலனாய்வை முடுக்கிவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம், ஆன்மீகப் பயண ஏற்பாடுகளின் பெயரால் நடக்கும் சமூக விரோதச் செயல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 57 வயது பெருமாள் மற்றும் அவருடன் 22 பேர் கொண்ட குழுவினர், சென்னை காவல் ஆணையரிடம் அளித்த கூட்டுப் புகாரில், அம்பத்தூரைச் சேர்ந்த சுவாதீஸ்வரன், அவரது தந்தை ஜெகதீசன், ராஜமோகன் (அ) சுவாமிநாதன், ஜீவா அம்மையார் ஆகியோர் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் தங்களைத் “சிவபக்தர்களுக்கான டிரஸ்ட்” சார்பாகக் கைலாசா சுற்றுலா ஏற்பாடு செய்வதாக நம்ப வைத்து, ஒவ்வொரு குடும்பத்தாரிடமும் ரூ.35,000 முதல் ரூ.90,000 வரை, தனித்தனியாக ரூ.5,000 முதல் ரூ.95,000 வரை மொத்தமாக ரூ.10,95,000-ஐ மோசடியாக வசூலித்துள்ளனர். பெரும்பாலானோர் ஜி-பே (G-Pay), ஆன்லைன் பரிமாற்றம் மூலமாகவும், நேரடியாகக் கையில் பணமாகவும் கொடுத்துள்ளனர்.
பணத்தை வசூலித்த பிறகு, திட்டமிட்டபடி சுற்றுலா தேதியைத் தொடர்ந்து தள்ளிப்போட்ட சுவாதீஸ்வரன், பின்னர் தனது தொலைபேசியை அணைத்துவிட்டு, தலைமறைவாகியுள்ளார். அவரைத் தொடர்பு கொண்டபோது, ஆபாசமாகவும் மிரட்டலாகவும் பேசியதோடு, பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, “யாரிடமாவது புகார் கொடுங்கள், எனக்கு பயமில்லை, என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது” என ஆணவமாகப் பேசியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இந்த மோசடிப் பணத்தைக் கொண்டு சுவாதீஸ்வரன் சென்னை, தி.நகர், பாண்டிச்சேரி, ஆந்திரா ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பக்தர்களிடம் இதேபோல் மோசடி செய்து, பல சொத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜாம்பஜார் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட இந்தக் குற்றப் புகாரின் அடிப்படையில், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மோசடிச் சம்பவத்தில் சுவாதீஸ்வரனின் தாயும், திருவல்லிக்கேணி தபால் நிலையம் எதிரிலுள்ள கோவிலில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் செல்வி என்ற பெண்ணும் உடந்தையாக இருந்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. மோசடி செய்யப்பட்ட தொகையை மீட்டுத் தரவும், குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
