கமல்ஹாசன், ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின் எனப் பிரபலங்கள் பங்கேற்பு; 'அமுதே தமிழே' பாடலுடன் அசத்திய கமல்ஹாசன்!
கோலிவுட் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்படப் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து, அமுதே தமிழே என்ற பாடலைப் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். நிகழ்ச்சியின் நடுவே பேசிய கமல்ஹாசன், அங்கு ஒலிக்கும் பாடல்களின் பட்டியலைத் தயாரித்தது வேறு யாருமில்லை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கமலின் புகழாரம்:
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய கமல்ஹாசன், இசைஞானி எனது அண்ணன் என்று கூறி இளையராஜாவைப் புகழ்ந்து பாடினார். அப்போது அவர் உருக்கமாகப் பேசியது, இளையராஜாவைக் கண்கலங்கச் செய்தது.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜாவின் பாடல்களை முணுமுணுக்காதவர்களே கிடையாது என்று புகழாரம் சூட்டினார். மேலும், சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்து, அதனை ஆல்பமாக வெளியிட வேண்டும் என்று இளையராஜாவுக்குக் கோரிக்கை விடுத்தார்.
சாமி என்றே அழைப்பேன் - ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, இளையராஜாவை நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர். நான் அவரை 'சாமி' என்றே அழைப்பேன், என்று கூறி நெகிழ்ந்தார்.
இப்போதும் 70, 80-களில் வந்த இளையராஜாவின் பாடலை ஒரு படத்தில் பயன்படுத்தினால், அந்தப் படம் வெற்றியடைந்து விடுகிறது. இப்போதுகூட 'கூலி' படத்தில் அவரது பாடலைப் பயன்படுத்தினோம், என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,துணை லண்டனில் நடந்த இளையராஜாவின் சிம்பொனியை நேரில் கேட்டு ரசிக்க முடியவில்லையேயென எல்லோருக்கும் இருந்த ஏக்கத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தீர்த்து வைத்துள்ளார், என்று பெருமிதத்துடன் கூறினார். உதயநிதியின் பேச்சைக் கேட்ட இளையராஜாவும், முதலமைச்சர் ஸ்டாலினும் நெகிழ்ந்துபோனது குறிப்பிடத்தக்கது.
விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்
இளையராஜாவின் 50 ஆண்டு காலப் பங்களிப்பைக் கொண்டாடும் இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளையராஜா, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் ஒன்றாக மேடையேறியது குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தவிர, தமிழ் சினிமாவிலிருந்து நடிகர் கார்த்தி, பிரபு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இயக்குனர் மிஷ்கின், இசையமைப்பாளர் பிரேம்ஜி உட்படப் பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தினர்.
