2022-ஆம் ஆண்டு சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் சீண்டல்; திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் ₹10,000 அபராதம் விதித்து உத்தரவு - குற்றவாளி மதுரை சிறையில் அடைப்பு!
ஒட்டன்சத்திரம், செப்டம்பர் 26: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்த வழக்கில், 63 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மகிலா நீதிமன்றம் (போக்சோ நீதிமன்றம்) இன்று அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்பட்டி பாளையங்கோட்டை ஆத்தூர் தாலுகாவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 63). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஒரு சிறுமியைக் கடத்திச் சென்று அவருக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததாகச் சிறுமியின் பெற்றோர் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், முதியவர் பழனிச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (செப்.26) நீதிபதிகள் சத்திய தாரா மற்றும் மைதிலி தலைமையிலான நீதிபதிகள், இந்தக் கொடூரமான குற்றச் செயலில் ஈடுபட்ட முதியவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்தும், கூடுதலாக ₹10,000 அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி தலைமையிலான காவல்துறையினர், முதியவர் பழனிச்சாமியை மதுரை சிறையில் அடைத்தனர். இந்தப் பரபரப்பான தீர்ப்பு, பாலியல் குற்றங்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாகச் செயல்படும் என்ற செய்தியை மீண்டும் உறுதி செய்துள்ளது.