வதந்திகள், அவதூறுகள் குறித்துத் தீவிர கண்காணிப்பு; தேவைப்பட்டால் பதிவிட்டவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அதிரடித் திட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, செப்டம்பர் 29: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் பதிவுகளை தமிழ்நாடு காவல்துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்த அசம்பாவிதச் சம்பவம் தொடர்பாகப் பதிவிட்டவர்களின் காணொளிகள் மற்றும் கருத்துகள் அனைத்தையும் காவல்துறை ஆராய்ச்சி வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தவறான தகவல்கள் அல்லது விஷமத்தனமான கருத்துகளைப் பதிவிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே அரசு எச்சரித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக, தற்போது பதிவுகள் அனைத்தும் நுட்பமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால், கரூர் அசம்பாவிதம் குறித்து சந்தேகத்துக்குரிய பதிவுகளைப் பதிவிட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் காவல்துறை அதிரடியாகத் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே வதந்தி பரப்பியதாக மூன்று அரசியல் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையின் இந்த சமூக வலைதளக் கண்காணிப்பு நடவடிக்கை மேலும் பலரைப் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரலாம் என்று அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.