புதினிடம் மோடி உக்ரைன் உத்தியைக் கேட்டார் எனக் கூறிய நேட்டோ தலைவர் மார்க் ரூட்டுக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்!
நேட்டோ (NATO) அமைப்பின் தலைவர் மார்க் ரூட் (Mark Rutte), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியது குறித்துத் தெரிவித்த கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேட்டோ தலைவர் மார்க் ரூட் பேசுகையில், ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய இந்தியப் பிரதமர் மோடி, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் உத்தி என்ன? என்று கேட்டார் எனக் கூறியதாகத் தகவல் வெளியானது.
இந்தியாவின் பதில்:
நேட்டோ தலைவரின் இந்தக் கூற்றுக்கு உடனடியாகப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், அந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும், பிரதமரின் உரையாடல்களை தவறாகச் சித்தரிப்பதை ஏற்க முடியாது என்றும், உரையாடலின் சூழல் மற்றும் உள்ளடக்கத்தை மார்க் ரூட் திரித்துக் கூறியுள்ளார் என்றும் வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
உக்ரைன் போரின் தொடக்கத்தில் இருந்தே, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா நிலைப்பாடு எடுத்து வரும் நிலையில், நேட்டோ தலைவரின் இந்தக் கருத்து அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.