கோப்பை வரலாற்றில் முதல்முறை இரு அணிகள் மோதல்; இந்திய அணியின் பலம் என்ன? பாகிஸ்தானின் பலவீனம் என்ன?
துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் மாபெரும் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்திய அணியும் - பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன.
ஆசியக் கோப்பையில் முதல்முறை:
ஆசியக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் இந்தியாவும் - பாகிஸ்தானும் முதன்முறையாக மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நடப்புத் தொடரில் இந்திய அணி தான் விளையாடிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று உற்சாகத்துடன் களமிறங்குகிறது. ஆனால், பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இருமுறை இந்தியாவிடம் தோல்வியைச் சந்தித்து, பல சிக்கல்களுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணியின் பலம்:
தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டம் எதிரணிகளைத் திணறடிக்கிறது. நடுவரிசையில் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணிக்குத் தேவையான ரன்களைச் சேர்க்கின்றனர்.
சுழற்பந்து வீச்சில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள குல்தீப் யாதவ், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக் கூடும். வருண் சக்ரவர்த்தியும் அணிக்குப் பலம் சேர்க்கக் கூடும்.
சூர்யா குமார் யாதவ் மீது எதிர்பார்ப்பு:
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யா குமார் யாதவ் நடப்புத் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் இத்தொடரில் ஒட்டுமொத்தமாக 71 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளதால், இறுதிப் போட்டியில் அவரது ஆட்டம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பாகிஸ்தானின் பலவீனம் மற்றும் பலம்:
பாகிஸ்தான் அணியின் பேட்டிங், இத்தொடரில் பெரிய அளவில் பங்களிப்பை அளிக்கவில்லை. சாஹிப்ஸாதா ஃபர்ஹானைத் தவிர, வேறு எந்த பேட்ஸ்மேன்களிடம் இருந்தும் பெரிய அளவிலான பங்களிப்பு வெளிப்படவில்லை. சைம் அயூப் 4 ஆட்டங்களில் 'டக் அவுட்' ஆகியுள்ளார். மேலும், ஹூசைன் தலத், சல்மான் அலி ஆகா ஆகியோர் சுழற்பந்து வீச்சில் தடுமாறுவதும், பஹர் ஸமான் எதிர்பார்த்த செயல்திறனை வெளிப்படுத்தாததும் அணிக்குப் பலவீனமாக உள்ளது.
பேட்டிங்கில் தடுமாறினாலும், பாகிஸ்தான் அணி அதன் பந்துவீச்சு திறனை பெரிதும் நம்பியுள்ளது. ஷாகின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப் ஆகியோரின் வேகக் கூட்டணி இந்திய அணியின் தொடக்க வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.