கல்வியில் சிறந்த தமிழ்நாடு திட்டம் மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படுவது பெருமை; துபாய் பயணத்தின்போது கமலஹாசன் உற்சாகப் பேட்டி!
நடிகர் கமல்ஹாசன் அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து மீண்டும் படம் நடிப்போம் என்று இன்று உற்சாகத்துடன் தெரிவித்தார். துபாய் செல்வதற்காகச் சென்னை விமான நிலையம் வந்த மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன், செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்கள், தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் காலை உணவுத் திட்டத்தைத் தெலுங்கானாவிலும் நடைமுறைப்படுத்துவதாகக் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தச் சமூக நலத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றுவது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் செயல் என்று பெருமிதத்துடன் கூறினார்.
மேலும், நடிகர்கள் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது குறித்துக் கேட்கப்பட்டபோது, நானும் ரஜினியும் ஏற்கனவே படம் நடித்துள்ளோம். மேலும் படம் நடிப்போம்" என்று கூறிவிட்டு அவர் தனது துபாய் பயணத்திற்காகப் புறப்பட்டுச் சென்றார். இந்தக் கருத்து, திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.