2 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 8 LSD ஸ்டாம்புகள் பறிமுதல்; காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கை!
சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் ஆ. அருண் உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர் (ANIU) நடத்திய தொடர் நடவடிக்கையில், மாம்பலம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் மற்றும் LSD ஸ்டாம்ப் வைத்திருந்த ஒருவர் நேற்று (செப். 26) கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனை மற்றும் பறிமுதல் விவரம்:
போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) தனிப்படையினர் மற்றும் R-1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், ரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று தி.நகர், மூப்பரப்பன் தெருவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவர் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, டி.நகர், அப்துல் அஜிஸ் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் (30) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து சுமார் 2 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 8 LSD ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணை விவரம்:
கைது செய்யப்பட்ட வெங்கடேசன், பிபிஏ (BBA) படித்து முடித்துவிட்டு, பழைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
சட்டவிரோதமாகப் போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட வெங்கடேசன், விசாரணைக்குப் பின்னர் நேற்று (26.09.2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.