டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல்; சோதனையில் புரளி என உறுதி செய்த போலீஸ்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் வீடு மற்றும் சென்னை நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்குப் பகுதிகளில் உள்ள இரண்டு வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடுக்கப்பட்டதால், சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் வீட்டுக்கு மிரட்டல்:
தமிழக காவல்துறை தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. அந்த இமெயிலில், நடிகர் விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, நீலாங்கரை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விஜய்யின் வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், அது மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது என்று போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
தூதரகங்களுக்கு மிரட்டல்:
இதேபோல, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த மிரட்டலில், நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள இலங்கை துணை தூதரகம்,
ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் துணை தூதரகம் ஆகிய அலுவலகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் தகவலை அடுத்து, இரண்டு தூதரகங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரச் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவுகள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ச்சியாக முக்கியப் பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு அலுவலகங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.