செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சிக்க வாய்ப்பு; உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பதிலடி இருக்குமா?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டுத் தனது மக்கள் சந்திப்பு பரப்புரையை இன்று (செப்டம்பர் 27) கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ள உள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற விஜய், அங்கிருந்து வாகனம் மூலம் நாமக்கல்லுக்குச் செல்கிறார். வழக்கமாக சனிக்கிழமைகளில் பரப்புரை மேற்கொண்டு வரும் விஜய், இன்றைய தினம் அரசியல் களம் சூடுபிடித்துள்ள கொங்கு மண்டலத்தில் உரையாற்றுகிறார்.
பரப்புரை விவரங்கள்:
நாமக்கல்: காலை 9 மணியளவில் நாமக்கல் கேஎஸ் திரையரங்கம் அருகே பரப்புரை மேற்கொள்கிறார்.
கரூர்: தொடர்ந்து, நண்பகல் 1 மணியளவில் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தங்கள் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், விஜய் தனது பேச்சில் திமுக அரசின் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளையும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கியப் பிரச்சினைகளையும் சுட்டிக் காட்ட உள்ளார்.
கடும் விமர்சனங்கள் எதிர்பார்ப்பு:
இன்றைய பரப்புரையில் முக்கியமாக, கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமாக இருக்கும் செந்தில் பாலாஜியைக் கடுமையாக விமர்சிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் திமுக தலைமையைக் குறிவைத்து விஜய் விமர்சனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், "நான் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசியதற்கு, விஜய் தனது இன்றைய பரப்புரை பேச்சில் பதிலடி கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயின் வருகையை ஒட்டி, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தொண்டர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். மேலும், திருச்சி விமான நிலையத்திலும் அவரை வரவேற்கத் தொண்டர்கள் திரண்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு மற்றும் கடும் கட்டுப்பாடுகளுடன் பரப்புரைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.