விஜய் ஒரு கத்துக்குட்டி, அவர் வேலையை அவர் பார்க்கட்டும் - பாஜகவுடனான கூட்டணி குறித்துப் பேசிய விஜய்யை கடுமையாகச் சாடிய முன்னாள் அமைச்சர்!
சென்னை: நாமக்கல்லில் இன்று (செப். 27) நடந்த பரப்புரைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அதிமுகவின் பாஜகவுடனான கூட்டணி குறித்து முன்வைத்த விமர்சனங்களுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய்யின் குற்றச்சாட்டு:
நாமக்கல் மக்கள் சந்திப்புப் பரப்புரையில் பேசிய விஜய், தனது கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்தி, மற்ற மூன்று கட்சிகளையும் விமர்சித்தார். அப்போது அதிமுகவின் கூட்டணி குறித்துப் பேசிய அவர், மூச்சுக்கு 300 முறை 'அம்மா அம்மா' என்று சொல்லிவிட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொன்ன விஷயத்தை முற்றிலுமாக மறந்துவிட்டு, ஒரு பொருந்தாக் கூட்டணியை அமைத்துக் கொண்டு, 'தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்' என்று சொல்லும் அதிமுக போல நாங்கள் இருக்க மாட்டோம் என்று விமர்சித்திருந்தார்.
அதிமுகவின் பதிலடி:
விஜய்யின் இந்தக் கருத்துக்குப் பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
பொன்விழா கண்ட அதிமுகவைப் பற்றி விமர்சிக்க விஜய்க்குத் தகுதியே இல்லை. அவர் ஒரு கத்துக்குட்டி என்று கடுமையாகச் சாடினார்.
மேலும் அவர், எங்கள் கூட்டணியைப் பற்றிப் பேச அவருக்கு உரிமை இல்லை. அவரது வேலையை அவர் பார்க்கட்டும். விஜய் மாவட்டத்துக்கு ஒரு கூட்டம் செல்கிறார். ஆனால் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாகச் சென்று மக்களைச் சந்திக்கிறார் என்றும் கூறி, விஜய்யின் அரசியல் அனுபவம் மற்றும் செயல்பாடு குறித்து விமர்சனத்தை முன்வைத்தார்.