பயணிகள் வாக்குவாதத்தால் சலசலப்பு; இது பெரிய ரக விமானம், பாதுகாப்பு கருதியே தாமதம் என்று அதிகாரிகள் சமாதானம்!
சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அங்கு மோசமான வானிலை நிலவுவதாகக் கூறித் தாமதமானதால், 158 பயணிகள் விமான நிலையத்தில் தவித்து நின்றனர். இதனால் அதிகாரிகள் மற்றும் பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7:20 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட வேண்டும். விமானத்தில் செல்ல வேண்டிய 158 பயணிகளும் உரிய நேரத்திற்கு வந்துவிட்டனர். ஆனால், அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதால், விமானம் இன்று தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என்று விமான நிலைய நிர்வாகம் அறிவித்தது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். மற்ற விமானங்கள் அந்தமானில் வந்து தரை இறங்கிச் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு மட்டும் என்ன மோசமான வானிலை? என்று பயணிகள் கடுமையாகக் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், இது மற்ற விமானங்களை விடப் பெரிய ரக விமானம். எனவே, பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதியே, வானிலை சீரடைந்த பின்புதான் விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறிப் பயணிகளைச் சமாதானப்படுத்தினர். தாமதம் காரணமாக 158 பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்ததால், அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.