₹1.33 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சாலையின் அவலம்; தரமற்ற பணியால் மக்கள் கொந்தளிப்பு - சீரமைக்காவிடில் போராட்டம்!
திருப்பத்தூர் அடுத்த பெருமாப்பட்டு பகுதியில், ₹1.33 கோடி செலவில் ஒரு மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட புதிய தார் சாலை, தற்போது குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சாலையைச் சீரமைக்காவிடில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் அடுத்த பெருமாப்பட்டு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் இருந்து ஜடையனூரில் உள்ள அரசுப் பள்ளிக்கு மாணவ மாணவிகள் சென்று வரும் முக்கியச் சாலையாக இது உள்ளது. இந்தப் பழமையான தார் சாலை மிகவும் குண்டும் குழியுமாகக் காணப்பட்டதால், பொதுமக்கள் சாலை அமைக்கக் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையடுத்து, முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2024-2025-ன் கீழ், 3 கிலோமீட்டர் அளவிலான இந்தத் தார் சாலை ₹1 கோடியே 33 லட்சம் மதிப்பில் பணி துவக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு முன்புதான் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பொதுமக்கள் கொந்தளிப்பு:
ஆனால், தார் சாலை அமைக்கப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில், ஜடையனூர் பகுதியில் வாகனங்கள் சென்றதால், சாலை கடுமையாகச் சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
வாகனங்கள் சென்றதற்கே ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்ட தார் சாலை இப்படி குண்டும் குழியுமாக மாறுகிறது என்றால், ஒப்பந்தக்காரர் எந்த அளவிற்குத் தரமற்ற முறையில் இந்தத் தார் சாலையை அமைத்திருப்பார்? என்று அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்தத் தரமற்ற தார் சாலையை உடனடியாகச் சீரமைக்கப்படாவிடில், பொதுமக்களை ஒன்று திரட்டி, விரைவில் சாலை மறியலில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.