மகளுடன் சாலையில் படுத்து உறங்கும் தாய்; அதிகாரிகளின் அத்துமீறலுக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட முயற்சி!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள கடல்மங்கலம் கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்ற காரணத்திற்காக, புதிதாகக் கட்டப்பட்ட மூதாட்டியின் வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அத்துமீறலுக்கு எதிராக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கணவனை இழந்த அமிர்தம் என்ற மூதாட்டி, தனது மகளுடன் கடந்த 50 ஆண்டுகளாக அரசுக்குச் சொந்தமான 'மந்தை வெளி' நிலத்தில் குடிசை வீட்டில் வசித்து வந்தார். அந்தக் குடிசை வீடு சேதமடைந்ததால், கடன் பெற்று ஹாலோ பிளாக் கற்களால் சிறிய வீடு ஒன்றைக் கட்டி வந்தார். இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவரின் தூண்டுதலின் பேரில் வந்த அதிகாரிகள், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர்.
மேலும், அமிர்தத்தையும் அவரது மகள் கல்பனாவையும் அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கைது செய்து சிறையில் அடைப்பதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் வீடிழந்த தாய், மகள் இருவரும் கடந்த சில நாட்களாகச் சாலையிலேயே படுத்து உறங்கி வருகின்றனர். இதைக் கண்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். தங்கள் கிராமத்தில் பட்டா இல்லாமல் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும்போது, தங்கள் வீட்டை மட்டும் இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
in
தமிழகம்