41 உயிர்களைப் பலி வாங்கிய அரசியல் தற்குறி எனப் போஸ்டரில் கடும் விமர்சனம்; தவெக தலைவர் ஆறுதல் கூறாதது கண்டிக்கத்தக்கது!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொண்ட கரூர் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தக் கோரச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துச் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போஸ்டரில் அச்சிடப்பட்ட குற்றச்சாட்டுகள்:
கரூர் சம்பவம் தொடர்பாகத் தவெக தலைவர் விஜய் மட்டுமின்றி, அவரது கட்சியைச் சார்ந்த யாரும் இதுவரை கரூருக்கு நேரில் சென்று உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்காதது பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் பெயரில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் போஸ்டர்களில், 39 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கி, தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை, கொலை குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும்" என்று அச்சிடப்பட்டு, விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
முற்றுகைப் போராட்டம் முயற்சி:
நேற்று முன் தினம் (செப். 28) தமிழ் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் விஜய்யின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திப் பேச்சுவார்த்தை நடத்தித் திருப்பி அனுப்பினர்.
நேற்று முற்றுகை முயற்சி, இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் எனத் தமிழ்நாடு மாணவர் சங்கத்தினர் தொடர்ந்து நடத்தி வரும் நடவடிக்கைகளால் மாநிலத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.