சூலூர் அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்த ஜோடியைக் கடத்த முயற்சி: 7 பேர் கொண்ட கும்பல் கைது! 7 arrested for attempting to abduct inter-caste married couple near Sulur

தேனியில் இருந்து வந்து காதல் ஜோடியின் வீட்டை அடித்து உடைக்க ரகளை; உயிருக்கு அஞ்சிய பெண் கதவைத் தாழிட்டுத் தப்பியதால் பெரும் பரபரப்பு!


கோவை மாவட்டம், சூலூர் அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரு காதல் ஜோடியைக் கடத்த முயன்ற 7 பேர் கொண்ட கும்பலைச் சூலூர் போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தக் கடத்தல் முயற்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கும், அதே கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிய இளைஞருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இதனால், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி, உள்ளூரில் இருந்தால் உயிருக்கு ஆபத்து வரலாம் என அஞ்சி, சூலூர் அருகிலுள்ள முத்துகவுண்டன்புதூரில் வாடகை வீடு எடுத்துத் தனியாகத் தங்கி வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல், இந்தக் காதல் ஜோடி தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து வந்துள்ளனர். அவர்கள் திருமணமான இளம்பெண்ணை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல முயன்றபோது, பெண் சம்மதிக்க மறுத்துள்ளார். உடனே, அவரை வலுக்கட்டாயமாகக் கடத்த முயற்சித்துள்ளனர். சுதாரித்துக்கொண்ட அந்தப் பெண் உடனடியாக வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பின்னர், வந்த கும்பல் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை அடித்து உடைக்க முயன்று ரவுடித்தனத்தில் ஈடுபட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் உடனடியாகச் சூலூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த சூலூர் ஆய்வாளர் செல்வராகவன் தலைமையிலான போலீசார், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 7 பேரையும் கைது செய்து, கடத்தல் முயற்சிக்குக் காரணம் என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!