வெல்டிங் இயந்திரத்துடன் சிக்கிய நபர்; காவல்துறை ரோந்து பணியால் தப்பியது விற்பனைப் பணம் மற்றும் மது பாட்டில்கள்!
பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தச்சூர் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையில் ஷட்டரைத் துளையிட்டுக் கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவரை, காவல்துறை ரோந்துப் பணியின்போது கையும் களவுமாகப் பிடித்துள்ளது.
சம்பவம் மற்றும் கைது:
கவரைப்பேட்டை காவல் நிலையத்தின் எதிரே, வயல்வெளியை ஒட்டித் தச்சூர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விற்பனையை முடித்துவிட்டு ஊழியர்கள் கடையைப் பூட்டிச் சென்ற நிலையில், நள்ளிரவில் காவல்துறையினரின் வழக்கமான ரோந்துப் பணி நடந்துள்ளது.
அப்போது, டாஸ்மாக் கடை ஷட்டரில் துளை போடப்பட்டிருப்பதைக் கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே பார்த்தபோது ஒரு மர்ம நபர் இருப்பதைக் கண்டுபிடித்து, அவரை லாவகமாகப் பிடித்துக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெளியான தகவல்கள்:
விசாரணையில் அவர், அமரம்பேடு பகுதியைச் சேர்ந்த வினோத் (30) என்பதும், பேட்டரியில் இயங்கும் சிறிய ரக வெல்டிங் இயந்திரத்தைக் கொண்டு டாஸ்மாக் கடை ஷட்டரில் துளையிட்டுக் கொள்ளையடிக்க முயன்றதும் தெரிய வந்தது. மேலும், இதேபோன்று பல்வேறு டாஸ்மாக் கடைகளில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பதும் தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் குறித்துக் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள் வெளியீடு:
இதற்கிடையே, கொள்ளை முயற்சியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் முகத்தில் கைக்குட்டை அணிந்து கொண்டு டாஸ்மாக் கடைக்கு வந்து நோட்டமிட்ட பிறகு, வெல்டிங் இயந்திரத்தைக் கொண்டு ஷட்டரில் துளையிடுகிறார். ஷட்டரைத் துளையிட்ட பிறகு உள்ளே இருந்த இரும்பு கேட்டை அறுக்க முயற்சிக்கும்போதே, ரோந்து போலீசிடம் சிக்கியுள்ளார்.கொள்ளைச் சம்பவம் நடப்பதற்கு முன்பே காவல்துறையினர் சரியான நேரத்தில் அங்கு வந்ததால், கடையிலிருந்த விற்பனைப் பணம் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவை தப்பியது.
https://youtube.com/shorts/SrDUdxAnFE0?feature=share