தெருவில் இருந்தால் மற்ற நாய்களுக்குப் பரவாதா? என மாமன்ற உறுப்பினர் பாரதி கேள்வி; NGO-க்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி பதிலடி!
சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தொடரின் வினாக்கள்-விடைகள் நேரத்தில், நாய்த் தொல்லை குறித்தப் புகாரை 158 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பாரதி எழுப்பியதுடன், நாய்கள் பிடிக்கும் பணியில் உள்ள தன்னார்வ அமைப்புகளின் (NGO) செயல்பாடு குறித்தும் கேள்வி எழுப்பினார்.
மாமன்ற உறுப்பினர் பாரதி பேசுகையில், நாய்களால் தொல்லை ஏற்படுவதாக நான் தான் முதன்முதலில் கேள்வி எழுப்பினேன். ஆனால் எனது வார்டிலேயே நாய் தொல்லையைக் கட்டுப்படுத்தவில்லை. தெருவில் திரியும் நாயைப் பிடிக்க 'ப்ளூ கிராஸ்' (Blue Cross) அமைப்புக்குத் தகவல் கொடுத்தோம். அவர்களும் வந்து நாயைப் பார்த்தார்கள்.
ஆனால், அந்த நாய்க்கு காய்ச்சல் இருப்பதாகவும், அதனைப் பிடித்துச் சென்றால் மற்ற நாய்களுக்கும் பரவும் என்பதால் பிடிக்காமல் விட்டு விட்டுச் சென்று விட்டனர். தெருவில் சுற்றுவதால் தெருவில் உள்ள மற்ற நாய்களுக்குப் பரவாதா? இதற்குத்தான் 'ப்ளூ கிராஸ்' உள்ளனரா?" என்று கேள்வி எழுப்பி தனது புலம்பலை வெளிப்படுத்தினார்.
மாநகராட்சி நிர்வாகத்தின் பதில்:
மாமன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்த மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், ப்ளூ கிராஸ் மட்டுமின்றி, வேறு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் (NGO) நாய் பிடிக்கும் பணியில் உள்ளன. அவற்றின் எண்களும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
இறுதியாகப் பதிலளித்த மேயர் பிரியா, NGO-க்கள் மூலமாக நாய்களைப் பிடிக்க வரும்போது, உங்களுக்கும் தகவல் அளிக்கச் சொல்கிறோம். நீங்களும் உடன் இருந்து இந்த நடவடிக்கைப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மாமன்ற உறுப்பினர் பாரதியிடம் தெரிவித்தார்.