அதிவேகமாகச் சென்ற லாரிகளைத் தட்டிக் கேட்ட தொள்ளாழி கிராம மக்கள்; பாஜக கொடி கட்டிய காரில் வந்த கும்பல் தாக்கும் CCTV காட்சி வெளியாகிப் பரபரப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம், தொள்ளாழி கிராமம் வழியாக அதிவேகமாகச் சென்ற மணல் லாரிகளைத் தடுத்த கிராம மக்கள் மீது, பா.ஜ.க. பிரமுகர் தலைமையிலான குண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழையசீவரம் அடுத்த உள்ளாவூர் பகுதியில் உள்ள பெரிய ஏரியிலிருந்த நாள் ஒன்றுக்குச் சுமார் 1,000 முதல் 2,000 வரையிலான லாரிகள் மூலம் ஏரி மண் அள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கனரக லாரிகள் பகல் நேரங்கள் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் தொள்ளாழி கிராமச் சாலை வழியாக அதிவேகமாகச் சென்றுள்ளன. இதனால் விபத்துகள் நிகழ்வதாகவும், பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதாகவும் கூறி, தொள்ளாழி கிராம மக்கள் அவ்வழியாகச் சென்ற லாரிகளைச் சிறைபிடித்துத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. கொடி கட்டிய காரில் வந்த ஒரு கும்பல், கிராம மக்களை அச்சுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டது. ஒரு கட்டத்தில், அக்கும்பல் கிராம மக்களை தள்ளிவிட்டுத் தாக்கியுள்ளது.
தங்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. மாநிலப் பட்டியலின அணியின் பொருளாளர் மதியழகன் மற்றும் உடன் வந்த குண்டர்கள் மீதும் அக்கிராம மக்கள் சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பாகக் கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், சாலவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, பா.ஜ.க. கொடி கட்டி வந்த காரில் வந்தவர், பா.ஜ.க. மாநிலப் பட்டியலின அணியின் மாவட்டப் பொருளாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட மதியழகன் என்றும், அவர் அடியாட்களைக் கொண்டு தாக்கியதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் கும்பல் கிராம மக்களைத் தாக்கும் சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.