சாலையோரத்தில் சென்ற சிறுமிக்குக் காயம்; வைரலாகும் வீடியோ!
புதுச்சேரியில் சாலையோரத்தில் நடந்து சென்ற சிறுமியைத் தெருநாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த, பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று புதுச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள நடைபாதை ஒன்றில் சிறுமி ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவரை வழிமறித்த தெருநாய் ஒன்று, சிறுமியை விரட்டிச் சென்று கடித்துக் குதறியது.
இந்தத் தாக்குதலில் சிறுமிக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் தெருநாயை விரட்டி அச்சிறுமியை மீட்டனர். பின்னர், சிகிச்சைக்காக அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
