7 லிட்டர் கள்ளச்சாராயம், சாராயம் காய்ச்சும் பொருட்கள் பறிமுதல்!
ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் அருகே தோட்டத்தில் வைத்துக் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக, திமுக பேரூராட்சி கவுன்சிலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிக்கோவில் குட்டைக்காடு பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாகத் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அங்குத் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்குச் சாராயம் விற்றுக்கொண்டிருந்த பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளரும், பெத்தாம்பாளையம் பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலருமான சுரேஷ்குமார் மற்றும் முத்துச்சாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 7 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
