திருச்சியில் பிரம்மாண்ட வரவேற்பு; போக்குவரத்து ஸ்தம்பித்ததால் போலீஸ் திணறல்; அரசியல் மாற்றம் நிச்சயம் என நம்பிக்கை!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்த கூட்டம் மத்தியில் பேசிய அவர், அண்ணா அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைத்ததே ஒரு திருப்புமுனையாகும். அதேபோல், அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலும் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்தார்.
விஜய்யின் பிரச்சாரப் பயணம், இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழிநெடுகிலும் தொண்டர்கள் கொடுத்த பிரம்மாண்ட வரவேற்பால், அவர் பிரச்சார நடைபெறும் மரக்கடை பகுதிக்கு வந்து சேர சுமார் 4 மணி நேரம் தாமதமானது. திருச்சி மாநகரமே போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துப் போனது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
திருச்சி வரலாறு படைக்கும் மண்
பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், "ஒரு சில மண்ணைத் தொட்டால் அனைத்தும் செழிக்கும் என்பார்கள். அப்படிப்பட்ட மண் தான் திருச்சி. இங்குத் தொடங்கினால் நிச்சயம் ஒரு திருப்புமுனை அமையும். போருக்குச் செல்லும் முன்பு, குலதெய்வக் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டுத்தான் போருக்குப் போவார்கள். அதேபோல், அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தல், ஒரு திருப்புமுனையாக அமையும்" என்று குறிப்பிட்டார்.
மேலும், நான் சொல்வது 1956-ல் அண்ணா அவர்கள் நடத்திய முதல் மாநில மாநாட்டை. அது திருச்சியில் தான் நடைபெற்றது. அதேபோல், நான் சொல்வது 1974-ம் ஆண்டு திருச்சி. திருச்சி என்றாலே நிறைய வரலாறு உண்டு. மதச்சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும், கல்விக்கும் பெயர் பெற்ற இடமாகத் திருச்சி திகழ்கிறது என்று அவர் கூறினார்.
திணறடித்த வரவேற்பு
சென்னை தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், தனது பிரச்சார வாகனத்தில் ஏறியதும், தொண்டர்கள் வெள்ளம் வாகனத்தைச் சூழ்ந்து கொண்டதால், நகர முடியாமல் திணறியது. திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியே வரவே 45 நிமிடங்கள் ஆனது.
வழியில் மக்கள் விஜயைக் காண ஆவலுடன் கூடியதால், ஒட்டுமொத்த திருச்சி மாநகரமும் குலுங்கியது. விஜயின் அரசியல் பயணம், பிற அரசியல் கட்சிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் ஒரு பெரிய மாற்றம் உண்டாகும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
.jpg)