அருப்புக்கோட்டை நிர்மலாதேவி பாணியில் நிகழ்வு; சஸ்பெண்ட் செய்த கல்லூரி நிர்வாகம்!
அருப்புக்கோட்டையில் பேராசிரியர் நிர்மலாதேவி மாணவிகளைத் தவறாக வழிநடத்திய சம்பவம் போன்றே, திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், முதலாமாண்டு மாணவியிடம் பாலியல்ரீதியாகத் தவறாகப் பேசிய ஆடியோ வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் நாகராஜன் என்பவர், கல்லூரி முதலாமாண்டு மாணவி ஒருவரிடம் செல்போனில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், அந்தப் பேராசிரியர், நீ எனக்கு வேண்டும். எதுவாக இருந்தாலும் இப்போதே சொல். என் கூட இருப்பியா, இருக்க மாட்டியா? என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி மாணவியைத் தவறான நோக்கத்துடன் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில், தன்மீது பாசத்துடன் பேராசிரியர் பேசுவதாக நினைத்துப் பழகிய அந்த மாணவி, தொடர்ந்து பேராசிரியர் ஆபாசமான வார்த்தைகளைப் பேசியதால் தனது தோழிகளிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். பேராசிரியரின் உண்மையான நோக்கம் தெரிய, அவரது பேச்சுகளை ஆடியோ பதிவு செய்யுமாறு தோழிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதன்படி, அந்த மாணவியும் தொடர்ந்து பேசி, பேராசிரியரின் ஆபாசப் பேச்சுகளைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து, கல்லூரி முதல்வர் கணேசனிடம் கேட்டபோது, அந்தக் குரல் பதிவு குறித்து என் கவனத்துக்கு வந்தது. முதற்கட்ட விசாரணையில் அந்தத் தமிழ்த் துறைப் பேராசிரியரின் தவறு உறுதி செய்யப்பட்டது. இது குறித்து உயர் மட்டக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவ மாணவிகள் கல்லூரி முதல்வரை நேரில் சந்தித்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் இதனைத் தற்போது வரை காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லையென மாணவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. மாணவிகளின் நலன் கருதி அந்தப் பேராசிரியர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.