Raghava Lawrence: பொதுமக்களுக்கு நல்லது செய்ய அரசுக்கு சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்தினேன் என, நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையான லாரன்ஸின் செய்தியாளர் சந்திப்பு:

செங்கல்பட்டு மாவட்டம் உத்தண்டியில் உள்ள தனது வீட்டில் ராகவா லாரன்ஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “புதியதாக ஒரு வாடகை வீட்டிற்கு செல்லும்போது வெளியில் இருந்து பார்க்க நன்றாக தான் இருக்கும். உள்லே சென்று பார்த்தால் தான் என்ன பிரச்னை என தெரியவரும். புதியதாக குடியேறும் பகுதியில் இருக்கும் நாய் கூட நம்மை பார்த்து சந்தேகப்பட்டு குரைக்கும். அதனுடன் நாம் பழகி நெருக்கமாக வேண்டும். பிடித்த பிஸ்கட் அல்லது உணவை போட்டு நட்பாக வேண்டும்.இதற்கு சில காலம் தேவைப்படும். இப்படி ஒரு வாடகை வீட்டிற்கே இவ்வளவு விஷயங்கள் என்றால், ஒரு அரசை நடத்துவது எவ்வளவு சிரமமானது. எனவே அவர்களுக்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டும்” என பேசியிருந்தார்.

லாரன்ஸ் மீது விழுந்த விமர்சனங்கள்:

லாரன்ஸ் குறிப்பிட்ட உவமை நெட்டிசன்களை அதிர்வடைய செய்தது. அதெப்படி பொதுமக்களை நாயுடன் ஒப்பிடலாம் என விமர்சிக்க தொடங்கினார். இப்படிப்பட்ட மனநிலையுடன் தான் மக்களுக்கு சேவை செய்ய வருகிறீர்களா? லாரன்ஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் இணையத்தில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், தான் சொன்ன விவகாரம் தவறான முறையில் திரித்து பரப்பப்பட்டு வருகிறது. மக்களை மோசமாக குறிப்பிடும் அளவிற்கு நான் மனசாட்சி இல்லாதவன் கிடையாது என லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார்.

லாரன்ஸ் சொன்ன விளக்கம்

ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள ஒரு தவறான புரிதலைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது ரசிகர்களும் மக்களும் என் தாய்க்குச் சமமானவர்கள் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். மக்களை நான் 'நாய்கள்' என்று குறிப்பிட்டதாகச் சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்; இது முற்றிலும் பொய்யானது மற்றும் தவறான தகவலாகும்.

நான் சொல்ல வந்தது என்னவென்றால், ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயரும்போது, அந்தச் சூழலையும், அங்குள்ள நாய்களையும், அவற்றின் பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு விருப்பங்களையும் புரிந்துகொள்ளச் சிறிது காலம் பிடிக்கும் என்பதுதான். நான் ஆழமாக மதிக்கும் மற்றும் என் தாய்க்குச் சமமாகக் கருதும் மக்களை 'நாய்கள்' என்று அழைக்கும் அளவுக்குக் கல்நெஞ்சம் படைத்தவன் நான் அல்ல.

ஒரு புதிய சூழலைப் புரிந்துகொண்டு அதற்கேற்பப் பழகிக்கொள்ள நேரம் தேவைப்படும் என்பது பற்றித்தான் நான் பேசினேனே தவிர, மக்களைக் குறித்து நான் அவ்வாறு குறிப்பிடவில்லை. எனவே, அனைவரும் அந்த முழு வீடியோவையும் பார்த்து, நான் உண்மையில் என்ன சொல்ல வந்தேன் என்பதைப் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:TN Weather Update: இடி, மின்னலுடன் இன்று எந்தெந்த மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை

தவெகவில் லாரன்ஸ்?

தனிமனிதனாக இதுவரை மக்களுக்கு சேவை செய்து வந்த தான், அரசியலில் நுழைந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய உள்ளேன் எனவும், இதற்கு தனது தாய் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் அண்மையில் லாரன்ஸ் அறிவித்தார். தொடர்ந்து, பொதுமக்களும் தான் அரசியலுக்கு வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதால், விரைவில் அரசியல் பயணம் தொடர்பாக அறிவிப்பேன் என கூறியுள்ளார். இதனால், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்து, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் லாரன்ஸ் வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article