மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று நடந்து வரும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

காப்பாற்றிய கேப்டன் - துணை கேப்டன்:

ஆட்டத்தை தொடங்கிய ஷபாலி வர்மா - ஸ்மிரிதி மந்தனா நிதானமாக ஆடத்தொடங்கினர். ஷபாலி வர்மா 6 ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த ஜெமிமா 1 ரன்னில் அவுட்டானார். 18 ரன்னில் 2 விக்கெட் விழுந்த நிலையில், ஸ்மிரிதி மந்தனா - ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி ஒன்று சேர்ந்தது.

கேப்டன் - துணை கேப்டன் இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். மைதானம் சற்று பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க இருவரும் பொறுப்புடன் ஆடினர். ஏதுவான பந்துகளை மட்டுமே பவுண்டரிக்கு விளாசினர். ஹர்மன்ப்ரீத் நிதானமாக ஆட ஸ்மிரிதி மந்தனா சற்று அதிரடி காட்டினார். அவர் அரைசதம் விளாசி அசத்தினார்.

கடைசியில் கலக்கிய ரிச்சா கோஷ்:

அதிரடி காட்டிய ஸ்மிரிதி மந்தனா ரமீன் ஷமீம் பந்தில் 44 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த பார்தி 1 ரன்னில் அவுட்டாக சில நிமிடங்களில் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 35 பந்துகளில் 4 பவுண்டரி 36 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

123 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி இழந்து தடுமாறியபோது களமிறங்கிய ரிச்சா கோஷ் அதிரடியாக ஆடினார். அவர் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினார். அவர் 17 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்து அவுட்டாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்களை எடுத்தது.

வெற்றி பெறுமா பாகிஸ்தான்?

தீப்தி ஷர்மா 12 ரன்களுடனும், ஸ்ரேயங்கா பாட்டீல் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணியின் ஷாதியா, ஃபாத்திமா தலா 2 விக்கெட்டுகளையும், தஸ்மியா, ரமீன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆடி வருகிறது.

Source: Read Full Article