சிவகங்கை மாவட்டத்தில் ஆயுதப்படை பெண் காவலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெண் காவலர் கூட்டு பாலியல் வன்கொடுமை

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான பெண் காவலர் ஒருவர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருப்புவனம் அருகே தூதை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ராபின் என்பவருடன் நட்பு இருந்துள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு அந்த பெண் காவலர் ராபினுடன் அப்பகுதியில் உள்ள மறைவான இடம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ராபினின் நண்பர்களான மகாராஜா மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் பெண் காவலரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.

அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த பெண் காவலர் உடனடியாக 100ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராபின், ஹரிஷ், மகாராஜா ஆகிய 3 பேரையும் விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் அவர்களை கைது செய்து சிறையிலடைத்தனர், இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பெண் அதிரடிப்படை வந்தும் பாதுகாப்பில்லையா?

இந்த நிலையில் இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவரான வானதி சீனிவாசன் தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “சிவகங்கை அருகே ஆயுதப்படை பெண் காவலர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. முதல்வர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் அதிரடிப்படை வந்து விட்டது இனி பெண்கள் நிம்மதியாக இருக்கலாம் என்ற நினைப்பை தவிடு பொடியாக்கும் வகையில் கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தவெக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது.

Also Read: TVK Vijay: வன்மத்தில் வடை சுடும் ஸ்டாலின்.. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்த குடும்பம்.. தவெக சரமாரி விமர்சனம்!

இப்படியே தொடர்ந்தால் தோல்வி தான்

இந்த ஆட்சியிலும் நமக்கு விடிவு இல்லை என்று ஒவ்வொரு பெண்ணும் உணரத் தொடங்கி விட்டனர். முதலமைச்சர் விஜய் அவர்களே நீங்கள் ஆரம்பித்து வைத்த சிங்கப்பெண் அதிரடிப்படை ஏதோ தமிழகத்தில் மாற்றம் கொண்டு வரப்போகிறது என்று நினைத்தால் வழக்கமாக காவல்துறை தன் கடமையை செய்வது போலவே இயங்குவதற்கு ஏன் சிறப்புப்படை என்ற பெயர்? இப்படி தமிழக பெண்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் தமிழக வெற்றிக் கழக அரசு தோல்வி கழக அரசாக மாறிவிடும் என்பதை நினைவில் கொண்டு பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article