ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கும் வேளையில், மத்திய கிழக்கில் புதிய பதற்றங்கள் வெடித்துள்ளன. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது அப்பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஹ்ரானும் வாஷிங்டனும் பல முக்கிய பிரச்னைகளில் ஒரு சாத்தியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்து வருவதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டும் ஒரு முக்கியமான நேரத்தில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால், ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

பெய்ரூட்டில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

அறிக்கைகளின்படி, லெபனான் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஹெஸ்புல்லாவின் கோட்டையாகவும், தஹியே எனவும் அறியப்படும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில், துல்லியமான தாக்குதல்கள் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

பெய்ரூட் மீதான தாக்குதல்களுக்கு, இதற்கு முன்னர் ஈரான் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளதால், இந்த தாக்குதல்கள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. முந்தைய மோதல்களில், இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைக்கு டெஹ்ரான் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் பதிலளித்தது. அதனால், தற்போதைய தாக்குதல், ஒரு பரந்த பிராந்திய மோதல் குறித்த அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் சமீபத்திய நிகழ்வுகள் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவையாகின்றன என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று தஹியேவில் வசிக்கும் மக்கள் கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலின் பதில் என்ன.?

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர், இஸ்ரேலிய பகுதியை நோக்கி ஹெஸ்புல்லா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலை நோக்கி பல ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டதாகக் கூறப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த ஆளில்லா விமான சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த சமீபத்திய மோதல், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமலுக்கு வந்த போர் நிறுத்தத்தின் பலவீனத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது.

தெற்கு லெபனானில் தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கைகளும், வழக்கமான வான்வழித் தாக்குதல்களும் நடைபெறுவதாக அந்நாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தக்கூடும் என்று அங்குள்ள மக்கள் அஞ்சுகின்றனர். பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அது மற்றொரு பதிலடியை தூண்டிவிடும் என்றும் கவலைப்படுகின்றனர்.

அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா.?

இப்படிப்பட்ட சூழலில், எப்போதுவேண்டுமானாலும் கையெழுத்தாகலாம் என்ற நிலையில் இருக்கும் அமெரிக்கா ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்படுமா என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஏனென்றால், இதற்கு முன்னர் இதேபோல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, அதனை காரணம் காட்டி, பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்தது ஈரான்.

தற்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதால், அமைதி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் பின்வாங்கிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரான் தரப்பிலிருந்து இன்னும் எந்த அறிக்கையும் வரவில்லை. அது வரும்போது தான் நிலைமை என்னவென்று தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: Read Full Article