முதலமைச்சர் விஜய் தான் எப்போதும் தமிழ்நாட்டு மக்களின் ஒரே நம்பிக்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.

விஜய் மற்றும் தவெகவை சாடிய மு.க.ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற திமுகமகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் தமிழக வெற்றிக் கழக அரசையும், முதலமைச்சர் விஜயையும் மிக கடுமையாக சாடினார்.

அதாவது, “நான் முதலமைச்சராக இருக்கும்போது டெல்லி சென்றபோது அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிக்க போனார் என்று சொன்ன விஜய், இப்போது எதுக்கு டெல்லி போனார்? கரூர் வழக்குல இருந்து தப்பிக்கவா? என கேள்வியெழுப்பினார். மேலும் எப்போதும் நம்பிக்கையோடு இருங்க என சொல்லும் விஜய்க்கு அவர் மீது நம்பிக்கை இல்லை. அடுத்தக்கட்சி ஆட்களை அவர் ஷாப்பிங் செய்கிறார். இந்த அலங்கோல ஆட்சி மக்களால் வீழ்த்தப்படும்” எனவும் ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

பொறாமையில் அழுது வடியும் ஸ்டாலின்

இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக வெற்றிக் கழக ஐடி விங் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தீய சக்தி திமுக கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார்.

இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார். பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் உடனடி நடவடிக்கையில் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை.

எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது. வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் கட்சி நிதி என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர்.

எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட காப்பி - பேஸ்ட் செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை காப்பி அடிக்க வேண்டிய அவசியமே இல்லை.தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார்.

நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார்.பாஜகவின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்” சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளது.

Source: Read Full Article