‘மரண வேகத்தில் வந்த கார்’.. தன் உயிரைக் கொடுத்து பேரனை மீட்ட பாசப்போராட்டம்: ஏற்காட்டில் குடிபோதை கும்பல் அட்டகாசம் - பஸ்சுக்காக காத்திருந்த பெண் உடல் நசுங்கி பலி!

‘மரண வேகத்தில் வந்த கார்’.. தன் உயிரைக் கொடுத்து பேரனை மீட்ட பாசப்போராட்டம்: ஏற்காட்டில் குடிபோதை கும்பல் அட்டகாசம் - பஸ்சுக்காக காத்திருந்த பெண் உடல் நசுங்கி பலி!
அரூர் இளைஞர்களின் ‘போதை’ சுற்றுலா கொடுத்த உயிர் வலி; 5 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பு - தப்பியோடிய கும்பலை ‘சேஸ்’ செய்து பிடித்த பொதுமக்கள்!

சேலம்: கோடை காலத்தின் குளிர்ச்சியை அனுபவிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பொறுப்பற்ற செயலால், ஏற்காடு மலைப்பாதையில் ஒரு ரத்த சரித்திரம் எழுதப்பட்டுள்ளது. ஏற்காடு அருகே செங்காடு பகுதியில் இன்று நிகழ்ந்த கோர விபத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த மூதாட்டி ஒருவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். குடிபோதையில் இருந்த இளைஞர் கும்பல் ஓட்டி வந்த கார் மோத வந்தபோது, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் 5 வயது பேரனை தள்ளிவிட்டு காப்பாற்றிய அந்தப் பெண்ணின் தியாகம், அப்பகுதி மக்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஏற்காடு மலைப்பகுதியில் பெரும் ‘டென்ஷனை’ உருவாக்கியுள்ளது.




சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் பகுதியில் உள்ள எஸ்.டி. நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி செல்லம்மாள் (62). இவர் இன்று தனது 5 வயது பேரன் கனிஷை அழைத்துக்கொண்டு நாகலூர் செல்வதற்காக ஏற்காடு - செங்காடு பிரிவு சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் இருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த மகேந்திரா சைலோ கார் ஒன்று, மலைப்பாதையில் ‘மரண’ வேகத்தில் வந்துள்ளது. காரை அரூர் பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி (22) என்பவர் ஓட்டி வந்துள்ளார். காரில் மொத்தம் 10 இளைஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உச்சக்கட்ட மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கார் செங்காடு பிரிவு ரோடு அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ‘தாறுமாறாக’ ஓடி, பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த செல்லம்மாள் மீது பயங்கரமாக மோதியது. கார் மோத வருவதை கடைசி நொடியில் ‘சுதாரித்துக் கொண்ட’ செல்லம்மாள், தனது பேரனை மட்டும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் கனிஷை ஓரமாகத் தள்ளிவிட்டுள்ளார். அடுத்த சில விநாடிகளில் அந்த ராட்சத கார் செல்லம்மாள் மீது ஏறி இறங்கியதில், அவரது உடல் நசுங்கி ‘ஸ்பாட்’டிலேயே உயிர் பிரிந்தது. செல்லம்மாள் தள்ளிவிட்டதால் 5 வயது சிறுவன் கனிஷ் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். சிறுவன் அலறும் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவனை மீட்டு முதலுதவி அளித்தனர்.
விபத்து நடந்த அடுத்த நிமிடம் காரில் இருந்த கும்பல் ‘எஸ்கேப்’ ஆக முயன்றது. ஓட்டுநர் பார்த்தசாரதி மற்றும் அவருடன் இருந்த 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.


ஆனால், காருக்குள் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த 3 பேரை அங்கிருந்த பொதுமக்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த 3 பேருக்கும் ‘தர்ம அடி’ கொடுத்து அங்கேயே சிறைபிடித்தனர். தகவலறிந்து ‘ஸ்பாட்’டிற்கு விரைந்து வந்த ஏற்காடு போலீசார், பொதுமக்களிடம் சிக்கிய 3 பேரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். செல்லம்மாளின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பியோடிய பார்த்தசாரதி உள்ளிட்ட மற்றவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர ‘சர்ச்’ ஆபரேஷனில் இறங்கினர். இதில் மேலும் இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதும், அதனால் ஏற்படும் விபத்துகளும் தொடர்கதையாகி வருவது உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்லம்மாளின் தியாகத்தால் உயிர் தப்பிய அந்தச் சிறுவன், தனது பாட்டியைத் தேடி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த ‘ஹிட் அண்ட் ரன்’ சம்பவம் தொடர்பாக ஏற்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- ஆ.மாரியப்பன்
புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks