திமுக தேர்தல் அறிக்கை 2026: மகளிர் உரிமைத் தொகை ₹2,000, 10 லட்சம் புதிய வீடுகள் - முழு விவரம்!

திமுக தேர்தல் அறிக்கை 2026: மகளிர் உரிமைத் தொகை ₹2,000, 10 லட்சம் புதிய வீடுகள் - முழு விவரம்!

கனிமொழி எம்.பி தலைமையிலான குழுவின் பரிந்துரையில் தயார்; பழைய திட்டங்களுக்குப் புத்துயிர், புதிய திட்டங்களுக்கு அடித்தளம்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக-வின் தேர்தல் அறிக்கையை இன்று முறைப்படி வெளியிட்டார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான 12 பேர் கொண்ட குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் திரட்டிய கருத்துகளின் அடிப்படையில் இந்த விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்களைக் கவரும் வகையில் 524 வாக்குறுதிகள் அடங்கிய இந்த அறிக்கையை, "தேர்தல் களத்தின் சூப்பர் ஸ்டார்" என முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் வர்ணித்தார்.

திமுக தேர்தல் அறிக்கை 2026: 

ஆளும் திமுக தரப்பிலிருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல திட்டங்களை விரிவுபடுத்தியும், உதவித் தொகைகளை இருமடங்காக உயர்த்தியும் அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மகளிர் மேம்பாடு: 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தற்போதுள்ள ₹1,000-லிருந்து ₹2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். வருமான வரி செலுத்தாத குடும்ப இல்லத்தரசிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ₹8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்குப் பிணையின்றி ₹5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

கல்வி மற்றும் இளைஞர் நலன்: 

காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். உயர்கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படும் 'புதுமைப்பெண்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன்' ஊக்கத்தொகை ₹1,500-ஆக உயர்த்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

வேளாண்மை மற்றும் உழவர் நலன்: 

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ₹3,500-ஆகவும், கரும்பு டன் ஒன்றுக்கு ₹4,500-ஆகவும் உயர்த்தப்படும். இலவச மின்சாரம் பெறும் 20 லட்சம் விவசாயிகளுக்கு மீட்டர்கள் இல்லாத நவீன மின்சார பம்புசெட்டுகள் வழங்கப்படும்.

மருத்துவம் மற்றும் பொதுநலன்: 

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் தொகை ₹10 லட்சமாக உயர்த்தப்படும். முதியோர் உதவித்தொகை ₹2,000-ஆகவும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ₹2,500-ஆகவும் உயர்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

வேலைவாய்ப்பு: 

அரசு அமைப்புகளில் உள்ள 1.5 லட்சம் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். 2030-க்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஊரகப்பகுதிகளில் 5,000 புத்தொழில்கள் தொடங்கப்படும்.

 முக்கிய அறிவிப்புகள்

மீனவர்களுக்கான தடைக்கால நிவாரணம் ₹12,000-ஆக உயர்கிறது. சென்னையில் மீண்டும் 'செம்மொழி மாநாடு' நடத்தப்படும். அரசு ஊழியர்களுக்காக எட்டாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தத் தனிக் குழு அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும். வட, தென், மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ₹20,000 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

நாளை (மார்ச் 30) திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் இருந்து தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.






புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks