பெரம்பூரில் பிரசாரத்திற்கு முட்டுக்கட்டை; திடீர் பள்ளங்கள், இரும்புத் தடுப்புகள் அமைத்த மாநகராட்சி மீது புகார்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்கள் நாளை (மார்ச் 28) சென்னை பெரம்பூர் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கையை "ஜனநாயகத்தின் மீதான பாசிசத் தாக்குதல்" என விஜய் அவர்கள் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஏற்கனவே பெரம்பூர் எம்கேபி நகரில் 3,000 பேர் கூட இடவசதி இல்லை எனக் கூறி அனுமதி மறுக்கப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்குப் பின்னால் உள்ள 'அரசியல்' சூழ்ச்சிகளை விஜய் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
விஜய் விடுத்துள்ள அதிரடி கண்டன அறிக்கை:
திட்டமிட்ட முட்டுக்கட்டை: "நாங்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே பெரம்பூர் முல்லை நகர் சந்திப்பில் பிரசாரம் செய்ய அனுமதி கோரினோம். ஆனால், பிரசாரத்திற்கு ஒருநாள் முன்னதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திடீரென எம்கேபி நகர் பகுதியில் பள்ளங்களைத் தோண்டி, இரும்புத் தடுப்புகளை அமைத்துள்ளனர்" என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக அரசுக்குக் கேள்வி:
"திடீரெனத் தோன்றிய இந்தப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன? அதிகாரிகள் சிலரின் துணையுடன் தவெக-விற்கு எதிராகச் செயல்படும் திமுக காபந்து அரசுக்கு இச்செயல் வெட்கமாக இல்லையா?" என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்கதையாகும் அனுமதி மறுப்பு:
தான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது மறுப்பதும் திமுக அரசுக்குத் தொடர்கதையாகி வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் தீர்ப்பு:
வரும் சட்டமன்றத் தேர்தலில் இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபடும் திமுக ஆட்சியைத் தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என்றும் அவர் முழங்கியுள்ளார்.
அரசியல் பரபரப்பு:
தவெக தலைவர் விஜய்யின் இந்தப் புகாரைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் நடுநிலைமை குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. மார்ச் 29-ஆம் தேதி தாஜ் கோரமண்டலில் நடைபெறவுள்ள வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு முன்னதாக, விஜய்யின் இந்தப் பிரசாரத் தடை அவரது தொண்டர்களிடையே பெரும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)