வேறு பெண்ணுடன் தொடர்பு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி சடையாண்டி ( வயது 28) இவருக்கு சுமதி ( வயது 26) என்பவருடன் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். சமீபகாலமாக சடையாண்டி அடிக்கடி தனது செல்போனில் யாருடனோ பேசி வந்துள்ளார். இது குறித்து சுமதி கேட்டபோது சடையாண்டி ஒழுங்காக பதில் சொல்லாததால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சடையாண்டி திடீரென வீட்டிலிருந்து மாயமானார். பதற்றமடைந்த அவரது மனைவி அவரது தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது

இதனால் மேலும் பதற்றமடைந்ததால் இது குறித்து சுமதி வடமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் சடையாண்டியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். அப்போது சடையாண்டி புத்தூர் பிச்சம்பட்டியைச் சேர்ந்த நாகேஷ்வரி ( வயது 21 ) என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.

நாகேஷ்வரியிடம் தனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை சடையாண்டி மறைத்து, 2-வதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையின் பொது தெரிய வந்துள்ளது. வடமதுரை போலீசார் சடையாண்டி, சுமதி ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இது குறித்து போலீசார் சுமதிக்கும் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசாரிடம் சடையாண்டி கூறுகையில் ;

எனது முதல் மனைவி சுமதி அடிக்கடி என்னுடன் தகராறு செய்து வந்தார். அதனால் நான் 2-வது திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 2 மனைவிகளுடனும் சேர்ந்து வாழ சம்மதம். எனவே 2 மனைவிகளையும் என்னுடன் அனுப்பி வையுங்கள். நான் இருவரையும் வைத்து கவனித்துக் கொள்கிறேன் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எச்சரித்த போலீசார்

நான் சடையாண்டியுடன் வாழ விரும்புகிறேன் என்னை அவருடன் அனுப்பி வையுங்கள் என நாகேஷ்வரி கூறிய நிலையில் , அதே சமயம் சடையாண்டியின் முதல் மனைவி சுமதியோ, தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களின் எதிர்காலம் கருதி தனது கணவரை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் மன்றாடியுள்ளார்.

இந்நிலையில் போலீசார் சடையாண்டியிடம், முதல் மனைவி இருக்கும் போது 2-வது திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். உங்கள் மீது வழக்கு பதிவு செய்தால், சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

அதோடு நாகேஷ்வரிக்கும் அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்த போலீசார் சடையாண்டியிடம் அவரது முதல் மனைவி சுமதி மற்றும் குழந்தைகளோடு சேர்ந்து வாழுமாறு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.

Source: Read Full Article