புதுச்சேரி: மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பிரதமராக நரேந்திர மோடி தனது 12 ஆண்டுகால சாதனைகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் விதமாக, தேசிய பாதுகாப்பு, நலத்திட்டங்கள், பெண்கள் அதிகாரம், பாரம்பரியம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய 5 முக்கிய தலைப்புகளின் கீழ் பாஜக தேசிய அளவில் பிரத்யேக சாதனைகள் குறித்த புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழா இன்று புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: “பிரதமர் நரேந்திர மோடி 4,402 நாட்களாக நாட்டின் பிரதமராக இருந்து சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறார். மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்டு செயல்பட்டதன் விளைவாக கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மீண்டுள்ளனர். 81 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

நாடு முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமற்ற பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. சுயஉதவிக்குழுக்களின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்த 3 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் லட்சாதிபதிகளாக உயர்ந்துள்ளனர். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 11 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொண்ட முதலீடுகள் ரூ.12.2 லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ளன. நாடு முழுவதும் 164 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. உதான் திட்டத்தின் கீழ் 124 புதிய விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியின் மூலம் 23 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 12 கோடிக்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் வகையில் தேசிய பாதுகாப்பு துறையில் இந்தியா வலிமைமிக்க நாடாக உருவெடுத்துள்ளது. நக்சலைட் பாதிப்புகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய பெருமையை போற்றும் வகையில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்தது. காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டு தமிழர் பண்பாடு உலக அரங்கில் எடுத்துச் செல்லப்பட்டது. நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டதன் மூலம் தமிழர்களுக்கு மிகப்பெரிய பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 68 வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்திரா காந்தி சிலை முதல் ராஜீவ் காந்தி சிலை வரை ரூ.436 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. புதுச்சேரியில் 30 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தட்டாஞ்சாவடி மற்றும் சேதராப்பட்டு பகுதிகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு வரவழைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற்ற வரலாறு உள்ளது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் நடைமுறைக்கு வந்தால் மனிதவளம் மற்றும் அரசுச் செலவுகள் பெருமளவில் சேமிக்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களின் நலன்களையும் பாதிக்காத வகையில் தீர்வு காணப்பட வேண்டும். அதேநேரத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீர் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. அனைத்து மாநிலங்களுக்கும் உரிய நீர் கிடைக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு. இதற்காகவே முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நதிநீர் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தார்.

நான் மத்திய மீன்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ராமேஸ்வரத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கடல்பாசி வளர்ப்பு திட்டம் மாநில அரசிடம் வழங்கப்பட்டது. அந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீனவர்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை. தற்போது புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அந்த திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Source: Read Full Article