மதுரை மாநகரில் சிங்கப்பெண் சிறப்பு படையினரின் முதல் அதிரடி நடவடிக்கை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - இரு ஆட்டோ ஓட்டுனர்கள் கைது.

சிங்கபெண் சிறப்பு படையினருக்கு கிடைத்த தகவல்

மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியில் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை மாநகர சிங்கபெண் சிறப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிங்கப்பெண் சிறப்பு படை பெண் உதவி ஆய்வாளர் தனபாக்கியலட்சுமி, பெண் தலைமை காவலர்கள் தேன்மொழி மற்றும் தமிழரசி ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவியிடம் தனியாக ரகசியமாக அழைத்து விபரங்களை கேட்டறிந்தனர்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்த பின்னர் தந்தை அளித்த புகாரின் பேரில் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சிங்கப்பெண் சிறப்பு படையினர் உதவியுடன் அனைத்து மகளிர் காவல்துறையினர் குற்றம் நடைபெற்ற இடம் மற்றும் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் தீவிர விசாரணையை நடத்தினர். அதனடிப்படையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மதுரை மாவட்டம் பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனரான முகமது இப்ராஹிம்( 65 ) மற்றும் காவல்துறை விசாரணையின் போது உண்மையை மறைத்து எதிரிக்கு உதவியாக இருந்த மதுரை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநரான அப்பாஸ் ( 55 ) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

மதுரை மாநகரில் சிங்கப்பெண் சிறப்பு படை தொடங்கிய இரண்டே நாட்களில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர்களை சிங்கப்பெண் சிறப்புபடை காவலர்களான பெண் உதவி ஆய்வாளர் தனபாக்கியலட்சுமி, பெண் தலைமை காவலர்கள் தேன்மொழி மற்றும் தமிழரசி ஆகியோர் விரைந்து செயல்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவியை விசாரணை செய்து உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளித்தும் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்ய உதவியாக இருந்த பணியை பாராட்டி மாநகர காவல் ஆணையர் கபில்குமார் சரத்கர் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மதுரை மாநகரில் சிங்கப்பெண் சிறப்பு படை தொடங்கிய முதல் அதிரடி நடவடிக்கையால் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்ட செயல் மதுரை மாநகர பெண்கள் மத்தியில் பாராட்டுதலை பெற்றுள்ளது.

Source: Read Full Article