ஈரானுடன் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வார இறுதிக்குள் ஈரானுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம் என்று அவர் கூறியுள்ளார். அவரது இந்த அறிக்கை, ஈரான் உடனான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. ட்ரம்ப் இந்த அறிக்கையை நேற்று வெள்ளை மாளிகையில் வெளியிட்டார்.

“நாம் விரும்பினால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிட முடியும்“

ஈரான் உடன் நடைபெற்றுவதும் பேச்சுவார்த்தை குறித்து தெரிவித்துள்ள ட்ரம்ப், "போர் நிறுத்தம் என்பது, குறைந்த மட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடப்பதைக் குறிக்கிறது," என்று கூறினார். ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மிக அருகில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஒரு ஒப்பந்தம் எட்டப்படலாம் அல்லது எட்டப்படாமலும் போகலாம், ஆனால் அப்படி எட்டப்பட்டால், அது இந்த வார இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், "நாம் விரும்பினால், அடுத்த 2-3 வாரங்களில் ஈரானை முற்றிலுமாக அழித்துவிட முடியும்.. அது மிகவும் எளிதானது. ஆனால், உயிர் இழப்புகள் இல்லாமல் ஒரு எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை எட்ட முடிந்தால், அதன் விளைவும் ஒன்றாகவே இருந்தால், நான் அதையே விரும்புவேன்," என்று ட்ரம்ப் கூறினார்.

“ஹார்முஸ் ஜலசந்தி மிக விரைவில் திறக்கப்படும்“

ஈரான் உடனான முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தானால், ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக திறக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். "புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான உடன் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும், அது மிக விரைவாகத் திறக்கப்படும்," என்று அவர் கூறினார். அப்பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்க ராணுவம் ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளது என்றும், சந்தேகிக்கப்பட்ட பெரும்பாலான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான எரிசக்தி விநியோகப் பாதைகளில் ஒன்றாகும். இது பாரசீக வளைகுடாவை சர்வதேச கடல்வழி வர்த்தகப் பாதைகளுடன் இணைக்கிறது. உலகின் எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவின் (LNG) பெரும் பகுதி இந்த ஜலசந்தி வழியாகவே கடந்து செல்கிறது. எனவே, அங்கு ஏற்படும் எந்த ஒரு இடையூறும், இந்தியா உட்பட பல நாடுகளுக்கு கவலையளிக்கும் ஒரு விஷயமாகிறது.

“அணு ஆயுத பிரச்னை மிக முக்கியமானது“

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை உருவாக்காமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த முழு பேச்சுவார்த்தையின் முதன்மை நோக்கம் என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். ட்ரம்ப்பின் கூற்றுப்படி, "நாங்கள் அணு ஆயுதங்களையோ, குண்டுகளையோ வைத்திருக்க மாட்டோம். அவற்றை நாங்கள் உருவாக்கவோ அல்லது வாங்கவோ மாட்டோம்" என்று ஈரான் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

"தற்போதைய நிலைமை என்னவென்றால், நாங்கள் மிக விரைவில் அங்கு செல்லவிருக்கிறோம். அவர்களுடன் சேர்ந்து அங்கு சென்று, அந்த பொருட்களை(செறிவூட்டப்பட்ட யுரேனியம்) மீட்டு, அவற்றை அழித்துவிடுவது என இப்போதே முடிவு செய்யப்பட்டுள்ளது. அது முற்றிலுமாக அழிக்கப்படும்," என்று ட்ரம்ப் கூறினார்.

ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ள நிலையில், ஈரான் என்ன செய்யப் போகிறது என்பதே உலக நாடுகளின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Source: Read Full Article