TN Assembly TVK Govt: தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அரசின், முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்:

சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏக்கள் பதவிப்பிரமாணம் மற்றும் புதிய அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டப்பேரவை கூடியது. இருப்பினும் முதலமைச்சர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசின் கீழ் முறைப்படியான முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இது ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்காக அவருக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள்:

காலை 9.50 மணிக்கு சட்டசபைக்கு வரும் ஆளுநருக்கு கோட்டை பிரதான கட்டிடத்தின் இரண்டாவது நுழைவு வாயில் அருகே காவல்துறையின் இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்படும்

சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்பார்கள்

தொடர்ந்து சிவப்புக் கம்பள விரிப்பில் நடந்து வரும் ஆளுநர், சட்டப்பேரவை மண்டபத்தில் கூடவுள்ள கூட்டத்தில் பங்கேற்று ஆங்கிலத்தில் உரையாற்றுவார்

ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார்

இந்த உரையில் புதிய அரசின் திட்டங்கள், நோக்கங்கள் இடம் பெறும்.

அதோடு அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டசபையின் அலுவல் குறித்த விவரங்கள் ஆலோசிக்கப்படும். அதன் முடிவில் இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகும்.

புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

புதிய அரசின் முதல் கூட்டத்தொடரிலேயே மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றுவதற்கான அதிரடியான அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. முன்னதாக அண்மையில் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட, மாநில அரசின் நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதோடு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் புதியவர்கள் என்பதால் இந்த கூட்டத்தொடர் மேலும் சுவாரஸ்யமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சண்டையா? சமாதானமா?

முந்தைய ஆட்சியின் போது தேசிய கீதம் முதலில் வாசிக்கப்படவில்லை என கூறி, உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்த சம்பவங்கள் தொடர்கதையாக இருந்தது. இந்த முறையும் அந்த சூழல் ஏற்படுமா? இல்லை எப்போதும் தமிழ்நாட்டின் அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு தான் முதலிடம் என்ற திமுக அரசின் நிலைப்பாட்டையே தவெக அரசும் தொடருமா? ஆளுநர் வெளிநடப்பு செய்யாமல் உரையை வாசிப்பாரா? என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதோடு கடந்த கால ஆட்சியின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது நேரலை துண்டிக்கப்படும். அந்த நிலையை மாற்றி தவெக அரசு அவையின் முழு நடவடிக்கைகளையும் நேரலையில் ஒளிபரப்பு செய்யுமா? என்ற கேள்வியும் நிலவுகிறது.

இதையும் படியுங்கள்: TN Weather Update: இடி, மின்னலுடன் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்.. சென்னை? தமிழக வானிலை

எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன?

மறுபுறம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்னைகள், சட்ட-ஒழுங்கு, மின்வெட்டு மற்றும் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பான பிரச்னைகளை சட்டப்பேரவையில் எழுப்ப பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் கேள்வி நேரத்தில் அவையில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article