சிவகங்கையில் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த ஆகாஷின் உடலை நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினர் அடக்கம் செய்த சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “மானாமதுரையில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட ஆகாஷின் மரணத்துக்கு நீதிகேட்டு, அவரது உடலை வாங்க மறுத்து, மூன்று மாதங்களுக்கு மேலாகக் குடும்பத்தினரும், உறவுகளும் போராடி வரும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணமாகக் காட்டி, பெற்றோரைக் கைதுசெய்து, உடலைக் காவல்துறையினரே அடக்கம் செய்திருப்பது அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும்.

நீதியைப் பெற்றுத் தர மறுக்கும் விஜய்

திமுகவின் ஆட்சியில் காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட அஜித்குமாரின் படுகொலைக்கு எதிராக அன்றைக்கு நீதிகேட்டு பேசிய முதல்வர் விஜய், அதே திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட ஆகாஷின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகாஷ் குற்றமிழைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலைசெய்வதற்கு காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நல்ல உடல்நலத்தோடு திடகாத்திரமாக இருந்த ஆகாஷ் காவல்துறை விசாரணைக்குப் பின்னர், ஒரேநாளில் உயிரிழக்கிறாரென்றால், அம்மரணத்துக்குக் காவல்துறையினர்தான் முழுப்பொறுப்பு. இதனை நீதிமன்றம்கூட கேட்க மறுத்திருப்பது ஏமாற்றமும், வேதனையுமளிக்கிறது. திமுகவை அரசியல் எதிரி என மேடைதோறும் பேசிவிட்டு, திமுகவின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட காவல்நிலையப் படுகொலையை மூடி மறைக்கத் துணைபோவது வெட்கக்கேடானது இல்லையா?

காவல்துறை அடக்கம் செய்வது பேரவலம்

பெற்றோர், குடும்பத்தினர் இல்லாது காவல்துறையே அடக்கம் செய்வதெல்லாம் ஏற்கவே முடியாதப் பேரவலம். தவெகவின் ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துபோன சூலூர் சிறுமியின் உடலைத் தாய்க்குத் தெரியாது, அடக்கம் செய்ததும், அதேபோல கும்மிடிப்பூண்டியில் இறந்துபோன சிறுமியின் உடலைப் பொன்னேரிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்திருப்பதும், இப்போது ஆகாஷின் உடலைப் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அடக்கம் செய்திருப்பதுமான காவல்துறையின் போக்குகள் தமிழ்நாட்டில்தான் வாழ்கிறோமா? இல்லை! உத்திரப்பிரதேசத்தில் வாழ்கிறோமா? எனும் கேள்வியை எழுப்புகிறது.

Also Read: Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?

வில்லன் கூட இப்படி செய்யமாட்டார்கள்

உங்களது திரைப்படங்களில் வில்லன்கள்கூட செய்யத் துணியாத ஒன்றை, உங்களது ஆட்சியில் அதிகாரவர்க்கம் செய்யுமென்றால், இதுதான் மக்களுக்கான மாசற்ற ஆட்சியா முதல்வரே? திரைப்படங்களில் அநீதிக்கு எதிராகச் சண்டையிட்டு அந்த மாயப்பிம்பத்தைக் காட்டியே வாக்குகளைப் பெற்று, ஆட்சியதிகாரத்துக்கு வந்த நீங்கள், நிஜத்தில் கொடுங்கோன்மையைக் கட்டவிழ்த்துவிட்டு செய்யும் கொடுமையெல்லாம் வாக்குச் செலுத்திய மக்களுக்குச் செய்யும் ஜனநாயகத் துரோகமாகும்.

எனவே ஆகாஷ் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவுசெய்து, தொடர்புடைய காவலர்களைக் கைதுசெய்ய வேண்டுமெனவும், ஆகாஷின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்” என சீமான் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article