தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக திகழும் கட்சி விசிக. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏ-வுமானவர் ஆளூர் ஷாநவாஸ். இவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

திருச்சி கிழக்கில் ஷாநவாஸ்?

விசிக-வில் இவர் பொறுப்பு வகித்து வந்தாலும் இவர் திமுக-வின் மிகப்பெரிய ஆதரவாளராகவே கட்சியில் அறியப்பட்டு வருகிறார். தேர்தலுக்கு பின்பு தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவு அளித்ததிலும் ஆளூர் ஷாநவாஸிற்கு விருப்பம் இல்லை என்றே கூறப்படுகிறது.

திமுக-வில் இணைவார் என்று ஷாநவாஸ் பற்றி தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவர் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக அவர் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

என்ன கணக்கு?

திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் சுயேட்சையாக களமிறங்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகளவு உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 40 ஆயிரம் இஸ்லாமியர்கள் வாக்குகள் உள்ளது.

சுயேட்சையாக களமிறங்கினாலும் ஷாநவாஸ் வெற்றி பெறுவது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். ஆனாலும், இந்த தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெருவாரியாகவும், பிற சமுதாயத்தினரின் வாக்குகளையும் ஓரளவு பெற்று வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக மாற ஷாநவாஸ் திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பான பணிக்கு தனது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். தனது வாக்கு பலத்தை காட்டிய பிறகு தனக்கென தனிக்கட்சி தொடங்குவதே அவரது திட்டமாக தற்போது உள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டில் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கான ஒரு வலுவான கட்சி இல்லாமல் இருப்பதால் அதற்கான வெற்றிடத்தை தான் பிடிக்க ஷாநவாஸ் திட்டமிட்டுள்ளார்.

திமுக-வில் இணையாதது ஏன்?

சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள அவர் தனிக்கட்சி தொடங்கி ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து தனித்துவ அடையாளம் பெற ஆர்வம் காட்டி வருகிறார். விசிக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தாலும் அங்கு தனக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும்? தனது அரசியல் எதிர்காலம் என்னவாகும்? என்ற பல்வேறு கேள்விகள் அவரது ஆதரவாளர்களாலே முன்வைக்கப்பட்டதால் ஷாநவாஸ் திமுக-வில் இணையும் முடிவில் இருந்தும் பின்வாங்கியதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற புதிய நிலைப்பாட்டை தவெக முன்னெடுத்துள்ள நிலையில், தற்போது முதலே தனிக்கட்சி தொடங்கி செயல்பட்டால் எதிர்காலத்தில் தானும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற இலக்கை அடையலாம் என்ற நோக்கத்தில் அவர் செயல்பட முடிவு செய்துள்ளார். இதனால், இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு ஷாநவாஸின் அதிகாரப்பூர்வமான சில முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article