CITU On Powercut: மின் தடை பிரச்னைகளை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

தலைவலியாக மாறிப்போன மின்தடை

தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. புதியதாக தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகே இந்த பிரச்னை எழுவதாக, திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த கால ஆட்சியாளர்கள் தங்களது பொறுப்பை முறையாக செய்யாததன் விளைவாகவே, தற்போதைய மின்தடை பிரச்னைக்கு காரணம் என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டு வருகிறது. இப்படி மாறி மாறி இரண்டு தரப்புகளும் குற்றம்சாட்டும் வேளையில், பொதுமக்கள் மட்டுமே நள்ளிரவில் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் தான், மின்வெட்டு பிரச்னைக்கு உண்மையான காரணம் என்னவென்று, சிஐடியு தொழிற்சங்க பேரவை விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மின் தடைக்கான உண்மையான காரணம் என்ன?

சிஐடியு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் கடுமையாகவும், கால அளவில் அதிகமானதாகவும் இருந்து வருகிறது. இதன் தாக்கம் கத்திரி முடிந்த பின்பும் இன்றும் தொடர்கிறது. கோடைக்காலங்களில் மின்தடை என்பது கடந்த ஆண்டுகளை போலவே நடப்பாண்டிலும் இருந்து வருகிறது. தமிழக மின்வாரிய புள்ளிவிவர கணக்குகளை ஆய்வு செய்தால் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் எவ்வளவு மின்தடைகள் ஏற்பட்டதோ, அதே அளவு மின்தடை தான் நடப்பாண்டிலும் ஏற்பட்டுள்ளது.

நிரப்பப்படாத காலியிடங்கள்

மின்சார நுகர்வும் சென்ற ஆண்டை போலவே இருந்தது. ஆனால் நடப்பாண்டில் கோடைக்காலத்தில் ஏற்படும் மின்தடைகளை மிகைப்படுத்தி, அரசியலாக்கி, மின்வாரிய ஊழியர்களுக்கு எதிராகவும், மின்வாரிய நிர்வாகத்திற்கு எதிராகவும் செயல்படுவது உண்மையில் கவலையளிக்கிறது.
மின்தடைக்கு உண்மையான காரணம் கடந்த 5 ஆண்டுகளாக நுகர்வோருக்கு சேவை செய்யக்கூடிய இடங்களில் பணியாளர்களை நியமிக்காதது மிகமுக்கியமான ஒன்றாகும். இரண்டாவது பணியாளர் பற்றாக்குறை காரணமாக மின்வழி தடங்களை பராமரிப்பு செய்வது என்ற மிக முக்கியமான பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறவில்லை.

நடைபெறாத பராமரிப்பு பணிகள்..

பராமரிப்பு பணிகளில் மிக முக்கியமானது காலாண்டு பராமரிப்பு, கோடைக்காலத்திற்கு முன்பாக பராமரிப்பு, மழை காலத்திற்கு முன்பாக பராமரிப்பு போன்ற எந்த பணிகளும் பணியாளர் பற்றாக்குறை காரணமாக நடைபெறவில்லை. இதுவே தற்போதைய மின்தடைக்கு முக்கியமான காரணம். முறையாக பராமரிப்பு செய்திருந்தால் மின்தடை ஏற்பட்டிருக்காது. இதுபோன்ற நிலையில் தற்போது ஏற்படும் மின்தடைக்கு யார் காரணம்? மின்வாரிய பணியாளர்களா அல்லது போதிய பணியாளர்களை பணி நியமனம் செய்ய அனுமதி வழங்காத அரசா?

இதையும் படியுங்கள்: Jayakumar: நள்ளிரவில் விஜய்க்கு பாடம் எடுத்த ஜெயக்குமார்..! டெபாசிட் பெறுவது எப்படி? TVK பதிலடி

விரைவில் போராட்டம்

நாங்களும் மனிதர்கள் தான். எங்களுக்கும் குடும்பம் உண்டு. தொடர்ந்து 20 மணி நேரங்கள் ஓய்வில்லாமல் உழைக்கும் நாங்கள் அரசின் கட்டளையை நிறைவேற்றும் இடத்தில் உள்ள பணியாளர்கள். தொடர்ந்து வேலை செய்வதால் வரும் மனஉளைச்சல் காரணமாக நூற்றுக்கணக்கான சக ஊழியர்களை இழந்துள்ளோம். கோடைக்காலம் போகும், மழைக்காலம் வரும், மீண்டும் மின்தடை ஏற்படும். இதற்கு காரணம் அரசின் கொள்கை தானே? மிக முக்கிய மக்கள் பிரச்சனையை அரசியல் ஆக்காமல், மக்கள் நலன்கருதி செயல்பட வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வுகாண போதிய களப்பணி ஊழியர்களை நிரப்பிட விரைவில் போராட்டம் அறிவிக்கவுள்ளோம்" என சிஐடியு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டின் மின்சார வாரிய கட்டமைப்பு 12 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டி இருந்தார். அதோடு, மின்சார வாரியத்தில் உள்ள 70 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களில், நடப்பாண்டிலேயே 15 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article