அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்த நிலையில், அதிமுகவிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்திலிருந்து, கனத்த இதயத்துடன் வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார். அவரது அறிக்கையின் முழு விவரத்தை காணலாம்.

சி. விஜயபாஸ்கரின் அறிக்கை

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த மகத்தான மக்கள் இயக்கத்தில், 'அம்மா' என்ற ஆருயிர் ஒற்றை வார்த்தையால் ஈர்க்கப்பட்டு, என் மாணவர் பருவத்திலிருந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகவும், இரண்டாவது தலைமுறையாகவும் என் வாழ்க்கைப் பாதையில் இயக்கத்தோடு என்னை அர்ப்பணித்தவன் நான்.“ என்று கூறியுள்ளார்.

மேலும், “எனக்கு இந்த இயக்கம் ஓர் அரசியல் அமைப்பு மட்டுமல்ல; என் உணர்வும், என் அடையாளமும், என் வாழ்க்கையின் ஒரு பகுதியும் ஆகும். மாணவர் அணியில் தொடங்கிய என் அரசியல் பயணம், எழுச்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் களங்கள் என இந்த இயக்கம் ஓர் அர்ப்பணிப்புமிக்க தொண்டனாக என்னை வழிநடத்தியது. என் இளமை, என் உழைப்பு, என் கனவுகள் அனைத்தும் இந்த இயக்கத்தோடு பின்னிப்பிணைந்தவை.“ என்று தனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

அதோடு, “அம்மா வாழ்ந்த பொற்காலத்தில், இந்த இயக்கத்தில் பணியாற்றியதை ஒரு பொறுப்பாக மட்டுமல்ல; பெரிய பெருமையாகவும், பெரும் வரமாகவும், என் பாக்கியமாகவும் நான் கருதினேன். ஆனால் இன்றோ, தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.“ என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தச் சூழலில், மனமெல்லாம் தீராத வேதனையைச் சுமந்தபடி என் பயணத்தை தொடர்வது சரியானதாக இருக்காது என்ற உணர்வோடு இந்த முடிவை எடுக்கிறேன். எனவே, கனத்த இதயத்துடனும் கலங்கிய மனதுடனும், இதுவரை என்னுடன் பயணித்த ரத்தத்தின் ரத்தங்களான கழகத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு, இந்த மகத்தான இயக்கத்திலிருந்து மனவலியோடு விலகுகிறேன்.“ என கூறியுள்ளார்.

இறுதியாக, “நான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல; என் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்திலிருந்து.
வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில், கனத்த இதயத்துடன் இயக்கத்திலிருந்து விடைபெற்றாலும்.. என் மண்ணுக்கான மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும்.. தொடர்வேன்!“ என்று சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அவரது பயணம் எங்கு தொடரும்.?

கடந்த ஒரு வார காலமாகவே, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவிலிருந்து சி. விஜயபாஸ்கர் விலக உள்ளதாக செய்தி வலம் வந்துகொண்டிருந்த நிலையில் தான், இன்று அவர் அதை ஊர்ஜிதம் செய்துள்ளார்.

அடுத்து, அவர் திமுகவில் இணையப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த சூழலில், அவர் தனது பயணம் தொடரும் என்று கூறியுள்ள நிலையில், அது எங்கு.? எந்த கட்சியில் இணைந்து என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அவர் திமுகவில் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில், ஒருவேளை தவெகவில் இணைவாறோ என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

ஆனால், அவர் என்ன செய்யப் போகிறார் என்பது, வரும் நாட்களில் தான் தெரியும். அதுவரை பொறுத்திருப்போம்.

Source: Read Full Article