சேலம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தில் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவால் மறுதேர்வு

நாடு முழுவதும் கடந்த மே 3ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 2 லட்சம் மருத்துவ இடங்கள் உள்ள நிலையில் 23 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இதில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1.4 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதியிருந்தனர். ஆனால் வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதுதொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு சிபிஐ நடத்திய விசாரணையில் இதுவரை மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் ரத்து செய்யப்பட்ட நீட் மறுதேர்வு நாளை (ஜூன் 21) நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலை

இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட மன உளைச்சலால் சில தினங்களுக்கு முன் கோவையில் அனு கீர்த்தனா என்ற மாணவி தற்கொலை செய்துக் கொண்டார். இது மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த சோகம் மறைவதற்குள் அடுத்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபிகா இரண்டாவது முறையாக இந்தாண்டு நீட் தேர்வு எழுதியிருந்தார். ஆனால் அது ரத்து செய்யப்படவே நாளை நடைபெறவிருந்த மறுதேர்வு எழுதவும் தயாராகி வந்தார்.

ஆனால் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த கோபிகா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது மக்களிடையே மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது.

Also Read: NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் தேர்வு அறையில் உடல் சோதனை என மாபெரும் உயிர்கொல்லும் மோசடி ஆகியிருக்கிறது. மோசடியான நீட் தேர்வை மத்திய அரசு ஒழித்தே ஆக வேண்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் - சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும். இந்த நேரத்தில், நீட் தேர்வுக்குத் தயாராகும் தம்பி - தங்கைகள், தேர்வு மன அழுத்தத்திற்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article