வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய பெண் கைது

சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் சைதாப்பேட்டை சி.ஜ.டி நகர் சூரியம்மாபேட்டை மேற்கு சாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில் பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி வீட்டில் சோதனை செய்து அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்த அமுதா ( வயது 40 ) என்ற நபரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த ஒரு பெண் மீட்கப்பட்டார்.

விசாரணையில் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட அமுதா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை திருடிய வழக்கில் நிதி நிறுவன ஓட்டுநர் உட்பட மூவர் கைது

சென்னை, OMR, கொட்டிவாக்கம் பகுதியில் வசித்து வரும் முத்துராமலிங்கம் ( வயது 29 ) என்பவர் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜென்டாக வேலை செய்து வருகிறார். முத்துராமலிங்கம் கடந்த 12.06.2026 அன்று வசூலான ரூ.2 கோடி பணத்தை பைனான்ஸ் அலுவலக அறையில் உள்ள மர பீரோவில் வைத்து பூட்டி விட்டு , மறுநாள் காலை வந்து பார்த்த போது , மர பீரோவில் வைத்திருந்த பணம் ரூ.2 கோடியை யாரோ திருடிச் சென்றதாகவும், பணத்தை திருடிய நபர்களை கண்டுப்பிடித்து, பணத்தை மீட்டு தருமாறு முத்துராமலிங்கம் சாஸ்திரி நகர் காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சாஸ்திரி நகர் நிலைய காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்தில் தீவிர விசாரணை செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை, ஆய்வு செய்ததில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலைக் கவசம் அணிந்து மேற்படி பைனான்ஸ் நிறுவனத்தில் கீழ்தளத்தில் வைத்திருந்த சாவியை எடுத்து நிறுவனத்திற்குள் சென்று பணத்தை எடுத்து வெளியே செல்வது தெரிய வந்தது.

அதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை செய்து மேற்படி பணத்திருட்டில் ஈடுபட்ட நிதி நிறுவன கார் ஓட்டுநர் கார்த்திகேயன் ( வயது 33) , வேலு ( வயது 36 ) , சந்திரசேகரன் ( வயது 33 ) ஆகிய மூவரை கைது செய்தனர்.

மேலும் போலீசாரின் விசாரணையில் நிதி நிறுவனத்தில் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு, அவரது நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை திருட திட்டமிட்டு, கடந்த 12.06.2026 அன்று இரவு கார்த்திகேயன் அவரது நண்பர்கள் வேலு மற்றும் சந்திரசேகரனுடன் காரில் மேற்படி நிதி நிறுவனத்திற்கு வந்துள்ளனர்.

பின்னர் கார்த்திகேயன் மட்டும் காரிலிருந்து இறங்கி தலைக்கவசம் அணிந்து, நிதி நிறுவனத்திற்குள் உள்ளே சென்று சாவியை எடுத்து பீரோவை திறந்து பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து திருடிய பணத்தில் செலவு செய்தது போக ரூ.1,97,94000 (ரூ.ஒரு கோடியே தொண்ணூற்று ஏழு லட்சத்து தொண்ணூற்று நான்காயிரம் மட்டும்) மீட்கப்பட்டது.

3 செல்போன்கள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Source: Read Full Article