அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் முழுமையாக குறைந்ததாகத் தெரியவில்லை. போருக்குப் பிறகு ஈரானின் ராணுவ பலம் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்று கூறி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது பதிவின் மூலம் ஈரான் மீது கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார். அமெரிக்கா ஈரானுக்கு எந்தவொரு பொருளாதார நிவாரணமும் வழங்காது என்றும், அமெரிக்காவிடமிருந்து ஒரு பைசா கூட ஈரான் பெறாது என்றும் ட்ரம்ப் தெளிவாகக் கூறியுள்ளார்.

“ஈரானின் ராணுவ சக்தி அழிக்கப்பட்டுவிட்டது“

சமூக வலைதளத்தின் தனது தொடர்ச்சியான பதிவுகள் மூலம், தனது அரசியல் எதிரிகளின் விமர்சனங்களை டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். சமீபத்திய மோதலால், ஈரானின் ராணுவத் திறன்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ட்ரம்பின் கூற்றுப்படி, ஈரானிடம் இனி திறமையான விமானப்படை, கடற்படை, போதுமான விமான எதிர்ப்பு அமைப்புகள் அல்லது ரேடார் இல்லை. இந்த போர் ஈரானை முற்றிலுமாக பலவீனப்படுத்தியுள்ளது என்றும், அதன் ராணுவ பலம் முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியினருக்கும் பதிலடி

இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சித் தலைவர்களையும் அமெரிக்க அதிபர் சாடியுள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட, ஈரான் இப்போது சிறந்த நிலையில் இருப்பதாக சில ஜனநாயகக் கட்சியினர் கூறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு, கிண்டலாக, "ஆனாலும், நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட ஈரான் இப்போது சிறந்த நிலையில் இருப்பதாக ஜனநாயகக் கட்சியினர் கூறுகிறார்கள். இதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா.? சில மனிதர்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்க முடியும்?" என்று ட்ரம்ப் அந்த பதிவில் கூறியுள்ளார்.

“பேச்சுவார்த்தைக்கு மிகவும் ஏங்கியது அமெரிக்கா அல்ல, ஈரான்தான்“

மோதலுக்குப் பிறகு, ஈரான்தான் பேச்சுவார்த்தைகளை தொடங்கியது, அமெரிக்கா அல்ல என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்திற்காக அவசரப்படவில்லை, ஆனால் ஈரான் பேச்சுவார்த்தைகளை விரும்பியது என்று அவர் கூறியுள்ளார். "நாங்கள் அவசரப்படவில்லை, ஈரான்தான் அவசரப்பட்டது. அவர்கள் முடிந்துவிட்டார்கள்," என்று அவர் கூறியுள்ளார். ஈரானுக்கு எந்தவிதமான நிதி உதவியும் வழங்குவதற்கு அமெரிக்கா ஆதரவாக இல்லை என்பதை ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். ஈரான் எந்தவிதமான நிதி உதவியையோ அல்லது நிதிப் பலன்களையோ பெறாது என்று அவர் கூறினார். "அவர்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்காது," என்று டிரம்ப் மற்றொரு பதிவில் கூறியுள்ளார்.

மொஜ்தபா கூறியது என்ன.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு "தீவிரமாக" முயன்றதாகவும், அதை அடைவதற்காக ஒவ்வொரு அரசியல் தந்திரத்தையும் அவர் பயன்படுத்தியதாகவும் நேற்று ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் தான், ட்ரம்ப் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பதிவை போட்டுள்ளார்.

அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, தனது முதல் பொது அறிக்கையை வெளியிட்ட மொஜ்தபா, தான் ஆரம்பத்தில் கொள்கை ரீதியாக இந்த ஒப்பந்தத்தை எதிர்த்ததாகவும், இருப்பினும், அதிபர் மசூத் பெஷெஷ்கியன் மற்றும் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள், இந்த ஒப்பந்தம் நாட்டின் மற்றும் எதிர்ப்பு முன்னணியின் நலன்களை பாதுகாக்கும் என்று அவருக்கு உறுதியளித்த பின்னர், அவர் அந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article