தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர் கருணாநிதி. அரசியல் மட்டுமின்றி தமிழ் இலக்கியம், தமிழ் திரையுலகிற்கும் ஏராளமான பணிகளைச் செய்துள்ளார். அவரது கலையுலக மற்றும் எழுத்துலக பணிகளை பாராட்டி கடந்த மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அவருக்கு பேனா அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

கடலுக்குள் பேனா:

80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 80 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் 30 மீட்டர் உயரம் 3 மீட்டர் விட்டமும் கொண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்தனர். ஆனால், இதை மெரினா கடற்கரை அருகே கடலுக்கு நடுவே இந்த பேனா சின்னத்தை அமைக்க திமுக அரசு முடிவு செய்திருந்தது. அந்த திட்டத்திற்கு அப்போதே பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால், கடல் வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் மீனவர்கள் நலனும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதற்கு எதிராக தமிழ்நாடு பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையில் நேற்று விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்க்வா ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,

பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு:

இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட்டால் வழக்கை முடித்து வைக்கலாம். நினைவுச் சின்னங்கள் அமைப்பதில் தவறு இல்லை. அதை தீர்ப்பாயம் எதிர்க்கவில்லை. ஆனால், கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகளை தீர்ப்பாயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும். இதனால், வரும் ஜுலை 28ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோ சொல்லுமா தவெக?

திமுக ஆட்சியிலே இந்த திட்டத்திற்கு மிக கடுமையான விமர்சனம் எழுந்த நிலையில், அவர்கள் இதை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை. அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மு.க.ஸ்டாலினைப் பொறுத்தமட்டில் பிரச்சினையாக எதையும் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. மக்கள் விருப்பத்தின் பேரிலே அனைத்தையும் செய்வார் என்று கூறியிருந்தார்.

திமுக-வை மிக கடுமையாக விமர்சித்து ஆட்சியைப் பிடித்த தவெக இந்த திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லாது என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், மீனவர்களின் பெருவாரியான ஆதரவு விஜய்க்கு இருப்பதாலும், அவர் மீனவ சமுதாயத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை கைவிடவே முடிவு செய்வார் என்று கருதப்படுகிறது.

அவ்வாறு இந்த திட்டம் கைவிடப்பட்டால் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்று கருதப்படுகிறது. பசுமைத் தீர்ப்பாயம் வரும் ஜுலை 28ம் தேதி வரை நேரம் அளித்துள்ள நிலையில், தவெக அரசு விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article